தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆண்டிபட்டி தொகுதியில் உள்ள வருசநாடு வனப் பகுதியில் துப்பாக்கியுடன் சிலர் சுற்றிவருவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறை, துப்பாக்கியை மட்டும் கொண்டுவந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அப்படி என்ன தான் நடந்தது வருசநாடு வன காட்டில் என காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது... வருசநாடு மலைப்பகுதியில் வாலிப்பாறையை அடுத்து தாண்டியன்குளம் என்ற மலை கிராமம் உள்ளது. அங்கு மலையாளி காட்டுப் பகுதியில் சிலர் கஞ்சா மற்றும் நாட்டுத்துப்பாக்கியுடன் சுற்றிவருவதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலை அடுத்து வருசநாடு சார்பு ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
காட்டிற்குள் பதுங்கியிருந்த இருவரை கண்ட போலீசார் அவர்களை விரட்டிச் சென்றுள்ளனர். போலீசாரை பார்த்த இருவரும் காட்டிற்குள் ஓடி மறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களில் ஒருவர் கையில் வைத்திருந்த ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கியை மட்டும் கிழே போட்டுவிட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. காட்டிற்குள் தப்பி ஓடியதால் அவர்களை துரத்திச் செல்ல முடியாததால், துப்பாக்கியுடன் போலீசார் திரும்பியுள்ளனர் என்றனர். ஆனால் தப்பித்து ஓடியவர்களை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ள காவல்துறை, வாலிப்பாறையைச் சேர்ந்த தினகரன் என்பவரது மகன் பிரபாகரன் மற்றும் தண்டியன்குளம் பெருமாள் என்பவரது மகன் சந்திரன் ஆகிய இருவர் என்றும், இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறியுள்ளது.
காட்டிற்குள் எதற்காக துப்பாக்கியுடன் இருந்தனர். வேட்டையாடுவதற்காகவா?அல்லது வேறு ஏதேனும் குற்றச்சம்பவத்திற்காகவா? என்ற கோணத்தில் விசாரணை நடத்திவருகின்றனர் போலீஸ் வட்டாரத்தில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.