
அச்சமும் கோழைத்தனமும்தான் சர்வாதிகாரம் என்பது; அது அரசியல் சாசனத்தின் அடிப்படையையே தகர்க்கிறது என எச்சரிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, வேவுபார்க்கும் உத்தரவை உடனடியாகத் திரும்பப்பெறுமாறு வலியுறுத்துகிறது! இது குறித்து அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’அனைத்து தொலைபேசிப் பேச்சுக்களையும் கம்ப்யூட்டர் பதிவுகளையும் கண்காணிக்க, அதாவது வேவுபார்க்க, 10 உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு சர்வாதிகாரம் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது ஒன்றிய உள்துறை அமைச்சகம்.
அந்த 10 அமைப்புகள்: 1. உளவுத்துறை (ஐபி) 2. போதைபொருள் கட்டுப்பாட்டுத் துறை 3. அமலாக்கத்துறை 4. மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையம் 5. வருவாய் உளவுத்துறை 6. சிபிஐ 7. தேசிய விசாரணை ஆணையம் 8. ‘ரா’ உளவு அமைப்பு 9. சிக்னல் உளவுத்துறை 10. டெல்லி காவல் ஆணையர்.
இந்த 10 அமைப்புகளுக்கும் வழங்கியுள்ள கூடுதல் அதிகாரங்கள், ஒன்றிய உள்துறைச் செயலர் ராஜீவ் கோபா வெளியிட்டுள்ள ஓர் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணித்தல், தகவல்களை ஆய்வு செய்தல், தகவல் பரிமாற்றங்களை இடைமறித்துப் பார்த்தல், தகவல்களை அழித்தல், ஏற்கனவே அழிக்கப்பட்ட தகவல்களை மீண்டும் கண்டுபிடித்து ஆய்வு செய்தல் உள்ளிட்ட அதிகாரங்கள்.
இந்த அதிகாரங்களைக் கொண்டு தனிநபர்கள், நிறுவனங்கள் என அனைத்து கம்ப்யூட்டர்களையும் உளவு பார்க்க முடியும்; அவற்றில் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களைப் பறிமுதல் செய்ய முடியும். வெளிநாடுகளிலிருந்து வரும் தகவல்கள் உள்பட ஒரு கம்ப்யூட்டரில் இருந்து இன்னொரு கம்ப்யூட்டருக்கு அனுப்பும் தகவல்களையும் பறிமுதல் செய்ய முடியும்; அழிக்கவும் முடியும். மேலும், இந்த 10 அமைப்புகளுக்கும் அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்; அப்படி ஒத்துழைக்கவில்லையெனில் அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் உண்டு என்கிறது உள்துறை அறிவிக்கை.
இது அரசியல் சாசனத்தின் அடிப்படையையே தகர்க்கும் முயற்சியாகும். எழுத்துரிமை, பேச்சுரிமை, கருத்துரிமை ஆகிய தனிநபர் சுதந்திரத்தையே கேள்விக்குறியாக்குவதாகும்.
பயங்கரவாதிகள் கம்ப்யூட்டர் மூலம் தகவல் பரிமாறிக்கொள்வதைக் கண்டுபிடிக்கவே இந்த அதிகாரங்கள் எனச் சொல்லும் காரணம் உண்மைக்குப் புறம்பானது. ஏனெனில், உளவு அமைப்புகள் ஏற்கனவே இந்த வேலையைச் செய்துகொண்டிருக்கின்றன.
முற்றிலும் அரசியல் காரணங்களே இதன் பின்னணியில் உள்ளன. மதவாதம், வகுப்புவாதம் தவிர ஆக்கபூர்வமான எந்தக் கொள்கையுமற்ற ஆளும் பாஜக இந்திய அரசியலில் மேற்கொண்டு நகர முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதே, இந்த சர்வாதிகார, பாசிச வேவுபார்க்கும் கேவலமான வக்கிர நடவடிக்கையை எடுக்கக் காரணமாகும்.
ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையே கடித்த கதைதான் இது. வேவுபார்ப்பதன் மூலம், ஒட்டுமொத்த மக்களையும் கிரிமினல்கள் என பெருவிரல் நீட்டுகிறது ஒன்றிய அரசு; ஆனால் இப்படிச் செய்ய நீ யார் என அதனைத் திருப்பிக்கேட்கின்றன மறுவிரல்கள்!
அச்சமும் கோழைத்தனமும்தான் சர்வாதிகாரம் என்பது; அது அரசியல் சாசனத்தின் அடிப்படையையே தகர்க்கிறது என எச்சரிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உடனடியாக இந்த வேவுபார்க்கும் உத்தரவைத் திரும்பப்பெறுமாறு வலியுறுத்துகிறது!’’