ஏப்ரல் 15-ம் தேதியுடன் ஏர்செல் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை அமைப்பான டிராய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் அனைவரும் ஏர்செல் நிறுவனத்தில் இருந்து மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சேவைக்கு மாற டிராய் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த வாரம் முதல் ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு சிக்னல் பிரச்சினை ஏற்பட்டு அழைப்புகளும் செல்லவில்லை, யாருடைய அழைப்புகளையும் ஏற்கவும் முடியவில்லை. அவசரமான சூழலுக்கு கூட யாரிடமும் தகவல் தொடர்பு கொள்ள முடியாதநிலை ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதனால், வங்கி பரிவர்த்தனை, வியாபார தொடர்புகளுக்கும் நீண்டகாலமாக ஏர்செல் எண்ணை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்களும் பெரிய சிரமத்துக்கு ஆளாகினர்.
இந்நிலையில், ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் சேவையில் நாளை மீண்டும் பாதிப்பு ஏற்படலாம் என்று அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சங்கர நாராயணன் தெரிவித்தார். இதற்கிடையே தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் எர்செல் தொடர்பு நிறுவனம் தங்கள் நிறுவனத்தை திவால் என அறிவிக்கக் கோரி நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்தது.
இதனால் ஏர்செல் வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் சேவையை மாற்றிக்கொள்ளும் படியும், அதற்கு ஏர்செல் நிறுவனம் உதவ வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டதில் இருந்து 90 நாட்களுக்குள் வாடிக்கையாளர்கள் அடுத்த சேவையை மாற்றித் தரவேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ம் தேதியுடன் ஏர்செல் நிறுவனத்தின் சேவை முற்றிலுமாக நிறுத்தப்படும் எனவும் டிராய் அறிவித்துள்ளது.
ஏர்செல் வாடிக்கையாளர்கள் தங்கள் சேவையை மாற்ற எம்என்பி கோட் எண் வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணைப் பெறுவதற்கு, PORT என டைப் செய்து, அத்துடன் உங்கள் மொபைல் எண்ணையும் சேர்த்து டைப் செய்து 1900 என்ற எண்ணிற்க்கு அனுப்பினால் போதுமானது.
அந்த எண்ணுடன் உங்கள் ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டு அருகில் உள்ள மொபைல் கடைகளில் உங்கள் எண்ணின் நெட்வொர்க்கை மாற்றிக் கொள்ளலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15க்குப் பிறகு இந்த சேவையை பெற இயலாது.