திருவண்ணாமலையில் தொடர்ந்து பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் திருவண்ணாமலை வ.உ.சி நகரில் நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டிருந்தது. மலை அடிவாரத்தில் இருக்கும் வ.உ.சி நகரில் மண்சரிவு ஏற்பட்டதில் பல வீடுகள் பாதிக்கப்பட்டன.
20 மணி நேரமாகியும் உள்ளே சிக்கியுள்ளவர்கள் நிலை என்ன என தெரியாமல் இருந்த நிலையில் மீட்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஜேசிபி இயந்திரத்தில் சிறுவனின் உடல் ஒன்று சிக்கியது. மீட்கப்பட்டது கௌதமன்(9) என்ற சிறுவனின் உடல் என்பது தெரியவந்துள்ளது. ஒரு சிறுவன், பெரியவரின் உடல் என இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் மேலும் பல உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது வரை 6 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அந்த பகுதிகளில் பொதுமக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. மீட்புக் குழுவினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடல்களை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. உடல்கள் தொடர்ச்சியாக கைப்பற்றப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளது திருவண்ணாமலை.
இந்தநிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் வ.உ.சி நகர்ப் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் ''எப்படியாவது நல்ல செய்தி வரும் என எதிர்பார்த்தோம். ஆனால் திருவண்ணாமலையில் உண்மையில் மிகத் துயரமான சம்பவம் நடந்துள்ளது. எஞ்சிய மீட்புப் பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பாறை மண் சரிவால் இறந்த ஏழு பேர் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிவாரண உதவி வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்'' என தெரிவித்த உதயநிதி, வஉசி நகர் மக்களுக்கு மாற்று இடம் தர தமிழக அரசு தயாராக உள்ளது. உ சி நகரம் மக்கள் வெளியே வந்தால் அவர்களுக்கு தனி திட்டமே போடப்படும். மண்சரிவு தொடர்பாக ஐஐடிக்கு மண் பரிசோதனை தர அறிவுறுத்தி உள்ளோம்'' என தெரிவித்துள்ளார்.