ஈரோடு மாவட்டத்தில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் 1984-ஈரோட்டில் போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகள் பொறியியல் படிப்புபடிப்பதற்காக, (I.R.T.T) பொறியியல் கல்லூரி சித்தோட்டில் உருவாக்கப்பட்டது. இக்கல்லூரி போக்குவரத்து துறையால் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதை அரசு கல்லூரியாக அறிவிக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மக்கள் ஜி. ராஜன்.
அவரது கடிதத்தில், "இந்த அரசு பெருந்துறையில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரியை (I.R.T.T Medical College) அனைவருடைய வேண்டுகோளையும் ஏற்று அரசு மருத்துவக் கல்லூரியாக அறிவித்து இருக்கின்றீர்கள். அதேபோல இந்த பொறியியல் கல்லூரியையும் அரசு கல்லூரியாக அறிவிக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இக்கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றினால் இந்த கல்லூரியை மையமாக வைத்து ஏறத்தாழ 10 மாவட்ட மாணவ, மாணவியர்கள் அரசு உதவி மூலமாக தங்களது உயர்கல்வியை படித்து நமது தமிழகத்தை மேம்படுத்துவதற்கு உதவிகரமாக அமையும். மேலும் இக்கல்லூரியில் தற்போது வழங்கப்பட்டு கொண்டிருக்கும் போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கான சேர்க்கை சதவிகிதத்தை அதே அடிப்படையில் (Transport Quota) போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கும் கொடுத்து, மீதி சதவிகிதத்தை பொதுப்பிரிவினர்அனைவருக்கும் கொடுத்தால் இக்கல்லூரி மூலமாக பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உருவாக முடியும் என்பது எந்தவித சந்தேகமும் இல்லை.
தற்பொழுது இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் 420 மாணவர்களை சேர்ப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றது, இதில் குறிப்பிட்ட சதவிகிதத்தை போக்குவரத்து ஊழியர்களின் குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு, மீதியை மற்ற மாணவ-மாணவியர்கள் பயன்படுத்த அரசு ஆவன செய்ய வேண்டும் என்றும், பெருந்துறை மருத்துவ கல்லூரிக்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை போன்றே இந்த பொறியியல் கல்லூரிக்கும் அனுமதியை அரசு தர வேண்டுமென்று காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பிலும் வேண்டுகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.