தமிழகம் முழுவதும் மாவட்ட வருவாய் அலுவலர் அந்தஸ்திலான 16 அலுவலர்கள் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். சேலம் ஆவின் பொதுமேலாளராக இரண்டாவது முறையாக விஜய்பாபு நியமிக்கப்பட்டு உள்ளார்.
சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக கூடுதல் இயக்குநர் மணிமேகலை, நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலராகவும்; கோவை விமான நிலைய விரிவாக்க தனி மாவட்ட அலுவலர் மீனாட்சி சுந்தரம், ராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலராகவும்; சென்னை 44வது செஸ் ஒலிம்பியாட் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழக திட்ட அலுவலராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை சிப்காட் பொது மேலாளர் பூவராகவன், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலராகவும்; சென்னை பழங்குடியினர் நல இணை இயக்குநர் நர்மதா, மதுரை ஒழுங்கு நடவடிக்கை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சேலம் ஆவின் பொதுமேலாளர் சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராகவும், அங்கு பணியாற்றி வந்த விஜய்பாபு சேலம் ஆவினுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர். இவர், ஏற்கனவே இரண்டாண்டுகளுக்கு முன்பு சேலம் ஆவினில் பொதுமேலாளராக பணியாற்றி வந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக இதே பணியிடத்திற்கு திரும்பியுள்ளார்.
மதுரை ஒழுங்கு நடவடிக்கை ஆணையர் பத்மாவதி, நாகையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் முதுநிலை மேலாளராகவும்; சென்னை ஆவின் இணை இயக்குநர் தங்கையா பாண்டியன், நெல்லை & தாமிரபரணி, கருமேனியார் & நம்பியார் ஆறு இணைப்புத்திட்ட தனி மாவட்ட அலுவலராகவும்; சென்னை நுகர்பொருள் வாணிபக் கழக பொதுமேலாளர் மீனா பிரியதர்ஷினி, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் உள்பட மொத்தம் 16 அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், 4 பேருக்கு டி.ஆர்.ஓ. ஆக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.