நெல்லையில் மாநகராட்சியின் நீர்த்தேக்கத் தொட்டியின் மோட்டார் அறைக்குச் சென்று குழாயைத் திறந்தபோது மின்சாரம் தாக்கி ஏழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனைக் கண்டித்து சிறுமியின் உறவினர்கள் மதுரை - நெல்லை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை வண்ணாரப்பேட்டை அம்பேத்கர் நகர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி சோனியா. இவர்களுடைய மகள் சத்யா (7) உடையார்பட்டியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்தார். சத்யா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று பள்ளிக்குச் செல்லவில்லை இதனால் சகோதரனுடன் சிறுமி விளையாடிக் கொண்டிருந்த பொழுது அங்கிருந்த மாநகராட்சிக்குச் சொந்தமான நீர்த்தேக்க தொட்டிக்குச் சென்று கைகளைக் கழுவ முயன்றுள்ளார். அப்பொழுது அங்கு தண்ணீர் வராததால் மோட்டார் ரூமிற்கு சென்று ஸ்விட்ச் போட்டுள்ளார். அப்போது திடீரென மின்சாரம் தாக்கி சிறுமி சத்யா உயிரிழந்தார்.
இதனைக் கண்டித்து அவரது உறவினர்கள் சிறுமியின் உடலை வாங்காமல் போராட்டம் செய்தனர். இன்று மதியம் மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அவரது உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிவாரணம் மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும், மாநகராட்சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் குண்டுக்கட்டாக அப்புறப்படுத்திக் கைது செய்தனர்.