Skip to main content

இளம் பெண் கடத்தி கொலை; உறவினர்கள் சாலை மறியல்- 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published on 31/10/2018 | Edited on 31/10/2018
k

  

 குளமங்கலத்தில் இருந்து ஆலங்குடி தனியார் மருந்து கடைக்கு  வேலைக்குச் சென்ற இளம் பெண் கடத்தி சென்று கொல்லப்பட்டு சடலம் கடற்கரையில் வீசப்பட்ட சம்பவத்தால் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.

 

v

  

 புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சித்திரவேல் மகள் கஸ்தூரி (வயது 19 ). கடந்த ஒரு மாதமாக ஆலங்குடியில் உள்ள ஒரு தனியார் மருந்துக்கடையில் வேலைக்கு சென்றுவருகிறார். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை வேலைக்குச் சென்றவர் வீட்டுக்கு திரும்பவில்லை என்று ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். போலிசார் விசாரனையில் ஆலங்குடி அருகில் உள்ள அதிரான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் சரக்கு ஆட்டோ ஓட்டுநர் நாகராஜன் (28) அழைத்துச் சென்றது தெரியவந்துள்ளது. அதன் பிறகு தப்பிச் சென்ற நாகராஜனை ஆலங்குடி போலிசார் கைது செய்து விசாரனை செய்த போது கஸ்தூரியை நம்பம்பட்டி பகுதியில் உள்ள தைல மரக்காட்டிற்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்த போது வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். அதன் பிறகு சாக்கு மூட்டையில் சடலத்தைக் கட்டி தஞ்சாவூர் மாவட்ட பேராவூரணி அருகில் உள்ள மல்லிபட்டினம் கடலுக்கு செல்லும் ஆற்றுவாய்க்காலில் சடலத்தை வீசியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதன் பிறகு புதன் கிழமை காலை ஆலங்குடி போலிசார் சடலத்தை மீட்டுள்ளனர்.

 

k

    

பெண்ணை காணவில்லை என்று புகார் கொடுத்த சித்திரவேல் மற்றும் அவரது உறவினர்களுக்கு கஸ்தூரி கொல்லப்பட்ட தகவல் கிடைத்ததும் பட்டுக்கோட்டை -  அறந்தாங்கி சாலையில் பனங்குளம் பாலத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்து சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமானோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர். 

 

    பாலத்தில் சாலை மறியல் போராட்டம் நடந்ததால் பெரியார், நெய்வத்தளி சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்ட தகவல் அறிந்து பெரியார் இணைப்புச் சாலையிலும் மறியல் தொடங்கி சாலைகள் மறிக்கப்பட்டது. அதே போல கொத்தமங்கலம் பகுதிக்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டது. 


    பனங்குளம், பெரியார் உள்ளிட்ட கிராமங்களில் சாலை மறியல் நடந்த தகவல் வெளியான நிலையில் வடகாட்டில் பட்டுக்கோட்டை, பேராவூரணி – புதுக்கோட்டை சாலையில் பேப்பர் மில் சாலையில் பந்தல் அமைத்து போராட்டம் நடத்தினார்கள். இந்த தகவல் அடுத்தடுத்து பரவியதால் கீழாத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் சாலை மறியல் போராட்டங்கள் தொடர்ந்தது.

 

m

 

   கீரமங்கலத்தை சுற்றி சுமார் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொந்தளிப்பு எற்பட்ட நிலையில் சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் வடகாடு, மாங்காடு பகுதிகளில் பிரதான சாலையில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. மேலும் பல இடங்களில் சாலைகளில் டயர்கள், மரங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டதால்  முழுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பனங்குளத்தில் சாலை மறியல் நடந்த இடத்திற்கு ஆலங்குடி எம்.எல்.ஏ மெய்யநாதன், முன்னால் ஒன்றிய பெருந்தலைவர் துரைதனசேகரன், வழக்கறிஞர் ஞான.கலைச்செல்வன், தி.மு.க ஒன்றியச் செயலாளர் ஞான.இளங்கோவன், த.மா.கா மாவட்ட தலைவர் மோகன்ராஜ், முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர்கள் தயாளன், ரஞ்சித், நெவளிநாதன், கோவிந்தராசு மற்றும் பலர் வந்தனர். 

 

போராட்டம் தொடர்ந்து நடந்ததால் புதுக்கோட்டை மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு செல்வராஜ், கோட்டாட்சியர் டெய்சிகுமார், ஆலங்குடி வட்டாட்சியர் ரெத்தினாவதி, மற்றும் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். போலிசார் குவிக்கப்பட்டனர்.

 

n


அப்போது போராட்டக்காரர்கள் தரப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கொலையில் சம்மந்தப்பட்டிருக்க வேண்டும் அவர்களையும் கைது செய்ய வேண்டும். பிரேதப் பரிசோதனையின் போது வீடியோ பதிவு மற்றும் போராட்டத் தரப்பிற்காக 2 டாக்டர்களை அனுமதிக்க வேண்டும். புகார் கொடுத்தும் காலங்கடத்தியதுடன் புகார் கொடுத்தவர்களையே ஏளனமாக பேசிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அனைத்தையும் கேட்ட பிறகு விசாரனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதுடன் 2 டாக்டர்கள், வீடியோ பதிவுகள் செய்ய அனுமதி அளித்தார். 

 

    அதிகாரிகளுடன்  நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் காலை 8 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் 2 மணிக்கு முடிவுக்கு வந்தது. சுமார் 7 மணி நேரம் ஆலங்குடி தொகுதிக்குள் பல கிராமங்களுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. மேலும் வடகாடு பகுதியில் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைக்க மேலும் ஒரு மணி நேரம் கூடுதலானது. போலிசார் கூறியபடி நடவடிக்கை எடுக்காத நிலையில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பொதுமக்கள் அறிவித்தனர்.

 

    சாலை மறியல் முடிந்த பிறகு மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு செல்வராஜ் செய்தியாளர்களிடம் கூறும் போது.. பெண்ணை காணவில்லை என்று புகார் கொடுக்கப்பட்ட நிலையில் தேடும் பணி தொடர்ந்ததால் ஒருவர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிலர் இருக்கலாம் என்று கோரிக்கை வைத்துள்ளனர். விசாரனை செய்து மேலும் யார் இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டிருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


            

சார்ந்த செய்திகள்