தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஸ்ரீவைகுண்ட பெருமாள் புரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி ராஜா. 27 வயதான இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பவர் ப்ளாண்ட்டில் பணிபுரிந்து வந்தார்.
சிறு சிறு எலக்ட்ரிகல் வேலைகளையும் செய்து வருபவர் என்பதால் கடந்த 23ம் தேதி காலை வீட்டில் எலக்ட்ரிகல் வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். நெடு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் அவரை தேடத் துவங்கியுள்ளனர். அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டாலும் பூபதி ராஜா அழைப்பை ஏற்கவில்லை.
அதே கிராமத்தில் இவர்களுக்கு இருந்த மற்றொரு வீட்டில் சென்று பார்த்த போது பூபதி ராஜா அந்த வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அவரது செல்போனில் ஆன்லைன் ரம்மி ஆப் இருந்ததும் அதை அவர் அடிக்கடி விளையாடியதும் தெரிய வந்தது. அதுமட்டுமின்றி அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது பெற்றோருக்கு வாட்ஸ் அப் மூலம் குரல் பதிவு ஒன்றையும் அனுப்பியுள்ளார். அதில், “அம்மா என்னை மன்னிச்சிடுமா. ஏகப்பட்ட கடன் வாங்கிட்டேன். ஒரு செயின் எடுத்து 40 ஆயிரத்திற்கு அடகு வச்சிட்டேன். ஒன்றரை லட்சம் லோனில் நான் 30 ஆயிரத்தை எடுத்திருக்கேன். இந்த மாசம் டியூ கட்ட வச்சிருந்த 6 ஆயிரத்தை எடுத்து செலவு பண்ணிட்டேன். அதையும் நான் தான் கட்டனும். அது போக கம்பெனில ஒரு பையன் கிட்ட 2000 வாங்கி இருக்கேன். அதையும் கொடுக்கல. இந்த மாசம் சம்பளம் செலவு பண்ணிட்டேன். என்ன மன்னிச்சிடு” கூறிய பின் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
பூபதியின் செல்போனில் அவர் குரல் பதிவு அனுப்பிய பொழுது அவரது இணைய இணைப்பை ஆஃப் செய்து வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.