ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. பவானிசாகர், குண்டேரிபள்ளம், வரட்டுபள்ளம், பெரும்பள்ளம் போன்ற அணைப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. குறிப்பாக குண்டேரிபள்ளம், வரட்டுப்பள்ளம் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் அணை அருகே தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தியூர் மற்றும் பர்கூர் மலைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பர்கூர் மலையையடுத்த மணியாச்சி பள்ளத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் தமிழக -கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள குட்டையூர், வேலாம்பட்டி ஆகிய கிராமங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.