பெங்களூருவை சேர்ந்தவர் ஜனார்த்தன சர்மா. இவர் நித்யானந்தாவுக்கு ஆதரவாக சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தவர். நித்யானந்தா மீதிருந்த மரியாதையால் அவர் மனைவி, மற்றும் நான்கு குழந்தைகள் உள்ளிட்ட அனைவருக்கும் நித்யானந்தாவை அவர் அறிமுகப்படுத்தியுள்ளார். சர்மாவின் மூன்று பெண் குழந்தைகள் உள்ளிட்ட நான்கு பேரும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் புறநகர் பகுதியான ஹிராபூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் படிப்புக்காக சேர்க்கப்பட்டிருந்தனர். அஹமதாபாத்திலுள்ள நித்தியானந்தாவின் நிர்வாகத்திற்கு அவர்கள் மாற்றப்பட்ட செய்தியறிந்த ஷர்மா, அங்கு மகள்களை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது ஆசிரமத்தில் உள்ளவர்கள், அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்.
பின்னர் காவல்துறையின் உதவியுடன் ஒரு மகளை அவர் அழைத்து வந்துவிட்டார். ஆனால் அவர்களது மூத்த மகள்களான லோபமுத்ரா ஜனார்த்தனா சர்மா (21) மற்றும் நந்திதா (18) ஆகியோர் வர மறுத்துவிட்டனர். இதையடுத்து ஷர்மா, தனது மகள்களை மீட்டுத் தருமாறு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். தங்களது இரண்டு மகள்களை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதுடன், அவர்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு ஜனார்த்தன ஷர்மா தம்பதியினர் கோரிக்கையும் வைத்திருந்தனர்.இந்நிலையில் ஜனார்த்தன சர்மாவின் அம்மா நேற்று நேரலையில் தோன்றி நித்யானந்தாவை கடுமையாக திட்டியுள்ளார். மேலும் தங்களுடன் வர மறுக்கும் தன்னுடைய மகள்களுக்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது, " ஏய், நந்திதா, லோபமுந்திரா அவன் (நித்யானந்தா) சொல்றத தான் கேட்பீங்களா, நீங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்யுங்க. ஆனா அப்பாவ பத்தி எதுக்கு தப்பா பேசிறீங்க. அவர் என்ன நித்யானந்தா மாதிரி பொம்பள பின்னாடி ஒளிஞ்சிகிட்டா இருக்காரு. பேச்சுக்கு பேச்சு ஜனார்த்தன சர்மா என்று எதற்காக பேசுகிறீர்கள். நீங்கள் தப்பு செய்யுறீங்க. அவன் நல்லவன் இல்லை. நான் வயிறு எரிஞ்சி சொல்றேன். டேய் நித்யானந்தா பொம்பள பின்னாடி எதுக்காக ஒளிஞ்சிகிட்டு இருக்க. எங்கள மாதிரி வெளிப்படையா இரு. நீயும், ரஞ்சிதாவும் வெளியில வர வேண்டிதானே, எதுக்கு யாருக்கும் தெரியாம ஒளிஞ்சுகிட்டு இருக்கீங்க. ஏதுக்காக பயப்படுறீங்க. உங்க மேல தப்பு இருக்கிறதால தானே? டேய் நித்யானந்தா நீ நல்லாவே இருக்கமாட்டே, அழிஞ்சி போயிடுவ, இது என்னுடைய சாபம்" என்று அவர் பேசியுள்ளார்.