ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த கொந்தளம் கிராமம், கொம்பனைபுதூர், நால்ரோடு பகுதியில் ஆற்றில் ஒரு டிராக்டரில் அனுமதியின்றி மணல் ஏற்றிக் கொண்டிருப்பதாக கொடுமுடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றிக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அந்த டிராக்டரை பிடித்து அதிகாரிகள் சோதனை செய்தபோது இரண்டு யூனிட் மணல் இருப்பது தெரியவந்தது.
மேலும் அந்த டிராக்டர் உடன் பதிவு இல்லாத டிரெய்லர் இருப்பதும் தெரியவந்தது. டிரைவரை பிடித்து விசாரித்தபோது அவர் சேலம் மாவட்டம் நல்லசொல்லிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சூர்யா (32) என தெரிய வந்தது. அவரிடம் விசாரித்தபோது கொடுமுடி பகுதியை இருந்த குணசேகரன் என்பவரிடம் டிரைவராக பணியாற்றி வந்தது தெரிய வந்தது. போலீஸ் விசாரணையில் பல்வேறு தகவல் வெளியாகின. தற்போது கொளத்துப்பாளையம் பகுதியில் ஊராட்சி மன்ற கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதன் ஒப்பந்ததாரராக சிவகிரி அஞ்சூர் ,முத்து கவுண்டன் பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் இருந்துள்ளார். இந்த கட்டிடம் கட்டுவதற்காக தேவையான மணலை செல்லமுத்து வற்புறுத்தலின் பேரில் குணசேகரன் தனது டிரைவர் சூர்யாவை அனுப்பி அனுமதியின்றி மணலை டிராக்டரில் ஏற்றி வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கொடுமுடி வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் டிரைவர் சூர்யாவை போலீசார் கைது செய்தனர். மணல் கடத்திய டிராக்டரை கொடுமுடி போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருக்கும் குணசேகரன் மற்றும் செல்லமுத்துவை தேடி வருகின்றனர்.