கரோனா தடுப்பு நடவடிக்கை, பொது முடக்கம் நீட்டிப்பு தொடர்பாக ஜெனீவா, வேலூர், ஈரோடு மற்றும் சென்னையிலுள்ள மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பிறகு ஐ.சி.எம்.ஆர். விஞ்ஞானி பிரதீப் கவுர் மற்றும் தொற்றுநோய் நிபுணர் குகானந்தம் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது மருத்துவக் குழுவினர் கூறியதாவது; "தமிழகத்தில் அதிகளவில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதிகளவில் கரோனா பரிசோதனை செய்வதைக் குறைக்கக் கூடாது என முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறித்து கவலைப்பட வேண்டாம். தமிழகத்தில் அதிகளவில் மருத்துவ பரிசோதனை செய்வதால்தான் அதிக பாதிப்புகளை கண்டறிய முடிகிறது. தமிழகத்தில் கரோனாவால் மரணமடைந்தவர்களின் விகிதம் குறைவாகவே உள்ளது. கரோனா பாதித்தவர்களை மூன்று நாட்களில் அடையாளம் காண வேண்டும்.
பணியிடங்களில் தொழிலாளர்களுக்கு மாஸ்க் அளிக்க வேண்டும்; அனைவரும் மாஸ்குடன் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் பொதுமுடக்கத்தை உடனே முழுவதும் நீக்காமல் படிப்படியாகத்தான் தளர்வு தர வேண்டும். உடனே பொதுமுடக்கத்தை நீக்கினால் கரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கும். பொதுமுடக்கத்தை நீட்டித்தால்தான் கரோனா மீது மக்களுக்குப் பயம் வரும்". இவ்வாறு மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.