கரிசல் பூமியிலிருக்கும் நாதஸ்வர கலைஞர்களை பற்றி எழுதிய சஞ்சாரம் நாவலுக்காக எஸ்.ராமகிருஷ்ணன் சாகித்ய அகாடமி விருதை பெற்றிருக்கிறார். சிறு கதைகள் மூலம் தமிழ் எழுத்தாளராக அடையாளம் பெற்ற இவர், பிறகு நவீன தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் தவிர்க்க முடியாத நாவலாசிரியராக உருவாகியுள்ளார். சிறுகதை, நாவல் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பயணம் செய்து பயணக் கட்டுரைகள் எழுத வல்லவர். பலருக்கு தன் எழுத்துகளின் மூலம் உலக சினிமா, உலக இலக்கியங்கள் பலவற்றை பற்றி அறிமுகம் செய்து வைத்திருக்கிறார்.
சாகித்ய அகடாமி விருதை பெற்ற எஸ்.ராமகிருஷ்ணனுக்கு இலக்கியவாதிகளும் கவிஞர்களும் அரசியல்வாதிகளும் திரைப்பட கலைஞர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். எம்.பி கணிமொழி சஞ்சாரம் நாவலுக்காக சாகித்ய அகடாமி விருதை பெற்ற எஸ்.ராவுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். எஸ்.ராவின் சக எழுத்தாளர்களான ஜெயமோகன் மற்றும் சாரு நிவேதிதாவும் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இயக்குனர் லிங்குசாமி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சண்டக்கோழி மற்றும் சண்டக்கோழி-2 ஆகிய படத்தில் லிங்குசாமியுடன் இணைந்து எஸ்.ரா வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.