
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ஆம் தேதி நடைபெறும் எனச் சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. அப்போது தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 - 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளார். இதனையடுத்து மார்ச் 15ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். அதனைத் தொடர்ந்து 2025 - 2026ஆம் ஆண்டிற்கான முன்பணம் மானிய கோரிக்கை, கூடுதல் செலவினங்களுக்கான மானிய கோரிக்கை ஆகியவை மார்ச் மாதம் 21ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களின் கருத்துகேட்பு குறித்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்ப்பட்டுள்ள அறிவிப்பில், “மண்ணைப் பொன்னாக மாற்றும் விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்து அவர்களது வாழ்வை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி 2021 - 22ஆம் ஆண்டு முதல் வேளாண்மைக்கென தனி நிதிநிலை அறிக்கை ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில்2025 - 26ஆம் ஆண்டிற்கான வேளாண்மைத் தனி நிதிநிலை அறிக்கையானது 5வது முறையாக வரும் மார்ச் 15ஆம் நாள் சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதன் பொருட்டு, இந்த நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய, பிரத்தியேகமாக உழவர் செயலியில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் tnagribudget20256@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவும் வேளாண் நிதிநிலையில் சேர்க்கப்பட வேண்டிய அம்சங்கள் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் தங்களது கருத்துக்களைப் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.