
நாமக்கல் மாவட்டம் பதிநகரில் வாடகை வீட்டில் வசித்து வந்த பிரேம்ராஜ் தனியார் வங்கி ஊழியர் ஆவார். இவருக்கு மோகனப்பிரியா (வயது 33) என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியருக்கு 11 வயதில் மகனும், 6 வயதில் மகனும் இருந்தனர். இந்நிலையில் இவர்கள் வீட்டில் இருந்து தாய், மகன் மற்றும் மகள் என 3 பேரின் சடலங்களை காவல்துறையினர் மீட்டனர். இதனையடுத்து இந்த 3 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் பிரேம்ராஜின் மனைவி, மகன் மற்றும் மகள் என்பது கண்டறியப்பட்டது. அதே சமயம் கடந்த 10 நாட்களில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சம் வரை பிரேம்ராஜ் இழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதோடு இந்த 3 பேரையும் கொலை செய்துவிட்டு கடிதம் எழுதி வைத்துவிட்டு பிரேம்ராஜ் தலைமறைவாகியுள்ளாரா? அல்லது இந்த 3 பேரும் தற்கொலை செய்துகொண்டனரா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரிய வரும் எனவும் காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சடலமாகக் கிடந்தது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.