Skip to main content

எட்டு வழிச்சாலைக்கு எதிராக மனித உரிமை கமிஷனில் புகார் கடிதம் அனுப்பும் போராட்டம்!

Published on 31/07/2018 | Edited on 31/07/2018
fff

 

சேலம் அருகே, எட்டு வழிச்சாலைக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் கடிதம் அளிக்கும் நூதன போராட்டத்தை ராமலிங்கபுரம், குப்பனூர் கிராம விவசாயிகள் கையிலெடுத்துள்ளனர். 


சேலம் - சென்னை இடையிலான எட்டு வழிச்சாலைக்காக சேலம் மாவட்டத்தில் தனியார் பட்டா நிலங்கள் 186 ஹெக்டேர் உள்பட 248 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. தனியார் நிலங்கள் பெரும்பாலும் முப்போகம் விளையக்கூடிய விவசாய நிலங்கள் என்பதாலும், சந்தை மதிப்பைக்காட்டிலும் அடிமாட்டு விலைக்கு அரசு இழப்பீடு வழங்குவதாலும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

f2


எட்டு வழிச்சாலை அமையவுள்ள தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களைவிட சேலம் மாவட்ட மக்கள் தொடர்ந்து இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். நிலம் அளக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை முற்றுகையிடுதுவது, தற்கொலை போராட்டம் என நேரடியாக விவசாயிகள் மோதிப்பார்த்தனர். பின்னர் அம்மனிடம் பொங்கல் வைத்து கோரிக்கை மனு அளித்தல், மாடுகளுக்கு கருப்புக்கொடி கட்டி எதிர்த்தல், சாபம் விடும் போராட்டம் என நூதன முறைகளிலும் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக, சேலத்தை அடுத்துள்ள ராமலிங்கபுரம், குப்பனூர் கிராம விவசாயிகள் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் கடிதம் அனுப்பும் நூதன போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர். 


மனித உரிமைகள் ஆணையத்திற்கு அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், ''எட்டுவழி பசுமைச்சாலை திட்டத்திற்காக தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் அத்துமீறி எங்கள் விளை நிலத்திற்குள் புகுந்து நிலம் அளக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மனித உரிமைகள் மீறிய செயலாகும். தயைகூர்ந்து எங்கள் நிலத்தில் இருந்து அவர்களை வெளியேறவும், இத்திட்டத்தை நிறுத்தி வைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று கேட்டுள்ளனர். 


இவ்வாறு பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயியும் தனித்தனியாக அஞ்சல் அட்டையில் எழுதி, கையெழுத்திட்டு மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பி உள்ளனர். 


இதுகுறித்து ராமலிங்கபுரம் விவசாயிகள் சிவகாமி, கவிதா, குப்புசாமி ஆகியோர் கூறுகையில், ''ஏற்கனவே என்ஹெச்&68 சாலைக்காக எங்கள் நிலத்தை கையகப்படுத்தினர். அந்த திட்டத்தால் எங்கள் ஊரே பாதி அழிந்து போனது. இப்போது எட்டு வழிச்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்துவதாலும், இந்த இடத்தில் அமையவுள்ள கிளவர்லீப் பாலத்தாலும் எஞ்சியிருக்கும் கிராமமும் அழியும் அபாயம் உள்ளது. 


இந்த திட்டத்தால் குடியிருப்புகள், விளை நிலங்கள் மட்டுமின்றி ஊர் மக்களே கட்டிமுடித்த பள்ளிக்கூடம், தண்ணீர் தொட்டி கோயில் எல்லாமே பறிபோகிறது. திரும்பத்திரும்ப எங்களை நசுக்கினால் நாங்கள் எங்கே போவோம்?. 


எங்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித்தருவோம் என்றனர். ஊரை விட்டு கரட்டுப்பகுதிக்குள் எங்களுக்கு வீடு கட்டித்தருவதாகச் சொல்கின்றனர். அங்கே எப்படி குடியிருக்க முடியும்? அரசு வேலைக்கு முன்னுரிமை சான்றால் யாருக்கும் பயனில்லை. எல்லாமே கண்துடைப்புதான். 


இதைப்பற்றி எல்லாம் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் விரிவாக பேசியிருக்கிறோம். இனிமேலும் எங்கள் நிலத்தில் காவல்துறையும், வருவாய்த்துறையினரும் கால் வைக்கக்கூடாது என்று மனித உரிமைகள் ஆணையத்திற்கும் எழுதி இருக்கிறோம்,'' என்றனர். 


விவசாயிகளின் நூதன போராட்டங்கள் ஒருபுறம் தொடர்ந்தாலும், எட்டு வழிச்சாலைக்காக நிலத்தை துல்லியமாக அளந்து, யார் யாருக்கு எவ்வளவு நிலம் பாதிக்கிறது? என்பது குறித்த விவரங்களை விரைவில் அரசிதழிலும் வெளியிட வருவாய்த்துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“தன்னை தரதரவென இழுத்துச் சென்றதாக செந்தில் பாலாஜி சொன்னார்” - மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் பேட்டி

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

"Senthil Balaji said that he was dragged as a standard" - Human Rights Commission member Kannadasan interviewed

 

கடந்த எட்டு நாட்களாக நடந்த வருமான வரிச் சோதனை, 18 மணி நேரங்களுக்கு மேலாக நடந்த அமலாக்கத்துறை சோதனையை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அமைச்சர்கள், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் நேற்று செந்தில் பாலாஜியை சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட முறையீடு, பிற்பகல் விசாரணைக்கு வந்தது. முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி மருத்துவமனை வளாகத்திற்கே சென்று விசாரணை நடத்தி 28 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

 

"Senthil Balaji said that he was dragged as a standard" - Human Rights Commission member Kannadasan interviewed

 

இந்நிலையில் மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையில் உள்ள செந்தில் பாலாஜியிடம் நேரடியாக விசாரித்தார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''மனித ஆணையம் தாமாக வந்தும் விசாரணை செய்யலாம். புகார்கள் வந்தாலும் விசாரணை செய்யலாம். இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்திகள் அடிப்படையில் இன்று விசாரணை நடத்தினேன். அவர் அசதியுடன் காணப்பட்டதால் சிறிது நேரம் காத்திருந்து பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினேன். நெஞ்சு வலி இருப்பதால் அதிகம் பேச இயலவில்லை என செந்தில் பாலாஜி என்னிடம் கூறினார். அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவரே கூறினார்.

 

அமலாக்கத்துறை தன்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், தன்னை தரதரவென இழுத்து சென்றதால் தனக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவர் படுத்திருந்ததால் அவருடைய காது பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை நான் பார்க்க முடியவில்லை'' என்றார். அப்பொழுது செய்தியாளர்கள் 'அமைச்சர் என்பதால் மட்டும் மனித உரிமை ஆணையம் சார்பில் விசாரிக்கிறீர்களா?' என்ற கேள்விக்கு, ''அப்படி எல்லாம் இல்ல எங்கு மனித உரிமை விதிமுறை மீறல் நடந்தாலும் நாங்கள் விசாரணை நடத்துவோம். இன்று அமைச்சரை விசாரித்ததால் ஊடகங்களில் பெரிதாக பேசுகிறீர்கள். மற்றபடி எல்லா மனித உரிமை மீறல் விவகாரங்களிலும் விசாரணை நடத்துவோம்'' என்றார்.

 

 

Next Story

கலாஷேத்ரா இயக்குநரிடம் விசாரித்த மனித உரிமைகள் ஆணையம்

Published on 11/04/2023 | Edited on 11/04/2023

 

Human Rights Commission questioned Kalashetra director

 

சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் எழுந்த நிலையில், இது தொடர்பாக கல்லூரி மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து புகார் தொடர்பாக தேடப்பட்டு வந்த ஹரிபத்மனை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மகளிர் ஆணையம் நடத்திய விசாரணையைத் தொடர்ந்து கலாஷேத்ரா கல்லூரி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த முன்னாள் டிஜிபி லத்திகா சரண் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

 

பாலியல் தொல்லை குறித்து புகார் கொடுத்த மாணவர்களை கலாஷேத்ரா நிர்வாகம் மிரட்டுவதைக் கண்டித்தும், ஓய்வு பெற்ற நீதிபதி  கண்ணன் தலைமையிலான குழுவினரின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் எனவும், பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ஹரிபத்மன் ஜாமீனில் வராமல் தடுக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்ற மூவரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நேற்று (10.04.2023) கலாஷேத்ரா கல்லூரி முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

 

Human Rights Commission questioned Kalashetra director
எஸ்.பி. மகேஸ்வரன்

 

இந்நிலையில் மாநில மகளிர் ஆணையத்தை தொடர்ந்து இன்று மனித உரிமைகள் ஆணையமும் கலாஷேத்ரா கல்லூரியில் விசாரணையில் ஈடுபட்டது. 6 வார காலத்திற்குள் விசாரணைக் குழு அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

 

இன்று காலை 11.30 மணிக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் காவல்துறை எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் காலாஷேத்ராவில் விசாரணையை துவங்கினர். இந்த விசாரணை குழு சுமார் 1 மணி அளவில் தனது விசாரணையை நிறைவு செய்தது. இந்த ஒன்றரை மணி நேரத்தில், கலாஷேத்ரா கல்லூரி முதல்வர் பகல ராம்தாஸ், இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், துணை இயக்குநர் பத்மாவதி உள்ளிட்டோரிடம் விசாரணை நடைபெற்றது. 

 

Human Rights Commission questioned Kalashetra director
இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன்

 

தொடர்ந்து அடுத்த வாரம் தேர்வுகள் முடிந்த பிறகு கலாஷேத்ரா மாணவ மாணவிகளிடம் விசாரணை நடத்தப்படும் என மனித உரிமைகள் ஆணையம் தரப்பில் இருந்து தகவல் சொல்லப்படுகிறது.