கிராமத்தில் இருவருக்கும் நடந்த வாக்குவாதத்தில் இளைஞர் ஒருவரை அனைவரின் முன்னிலையிலும் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் அடித்துக் காயப்படுத்தியதில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார் அந்த இளைஞர். இந்நிலையில் தற்கொலைக்கு காரணமான சார்பு ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்காவிடில் சடலத்தை வாங்கமாட்டோம் என உறவினர்கள் போராடி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் காவல்துறை சரகம் சடையப்பப்புரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். மேலப்பாவூர் அரிசி ஆலையில் கூலித்தொழிலாளியாகப் பணியாற்றி வரும் இவருக்கும், இதே பகுதியை சேர்ந்த இவரது உறவினரான வெங்கடேஷூற்கும் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் பணி முடித்து திரும்பி வந்த பாலசுப்பிரமணியத்திற்கும், வெங்கடேஷ் மற்றும் மனைவி மாடத்தியாளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருதரப்பும் காவல் நிலையத்திற்கு சென்று திரும்பியதாக கூறப்படுகின்றது. அதன் பின் சடையப்பபுரம் அனஞ்சி கோனார் வீட்டின் பின்புறமுள்ள மாட்டுத்தொழுவத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிரற்ற உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பாலசுப்பிரமணியத்தின் தற்கொலைக்குக் காரணம் சார்பு ஆய்வாளர் சின்னத்துரையும், போலீசாரும் காரணம் என உடலை வாங்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர் இறந்த இளைஞரின் உறவினர்கள்.
இதுக்குறித்து பேசிய இறந்தவரின் மனைவி சக்தி, "உடுத்தியிருந்த கைலி சட்டை கிழிந்த நிலையில் அடிப்பட்ட காயத்துடன் வியாழக்கிழமையன்று இரவில் வீட்டிற்கு வந்தவர், வெங்கடேஷூடனான சண்டையை காவல்துறைக்கு தெரிவிப்பதாக அவருடைய இரு சக்கர வாகனத்தில் (TN 76 P3507) சென்ற அவரை குலசேகரப்பட்டி விலக்கு அருகில் தடுத்து நிறுத்தி மீண்டும் சண்டையிட்டுள்ளனர் வெங்கடேஷூம் அவருடைய மனைவியும். அதே நேரத்தில் காவல்துறைக்கும் தகவல் சொல்ல, அப்பொழுது அங்கு வந்த சார்பு ஆய்வாளர் சின்னத்துரையும், போலீசாரும் சேர்ந்து ரோட்டிலேயே வைத்து சகட்டு மேனிக்கு தாக்கியும், வண்டியை பறிமுதல் செய்தும் அனுப்பியதை என்னிடம் கூறினார் அவர். அதன் பின் மன உளைச்சலால் அழுது கொண்டிருந்தவரை ஆறுதல் படுத்தி தூங்க வைத்தேன். எப்பொழுது எழுந்து சென்றாரோ தெரியவில்லை. அதிகாலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்தது. இதற்கெல்லாம் காரணமான எஸ்.ஐ. சின்னத்துரை மட்டும் வெங்கடேஷ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை வேண்டும்" என்றார்.