
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா வெட்டன்விடுதி அருகே உள்ள நைனான்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர் வி. மகேஷ்வரன் (வயது 38). மாற்றுத்திறனாளியான இவர் வெட்டன்விடுதி அரசு மேல் நிலை பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வந்தார். தற்போது 10ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்தத் தேர்விற்கு 8ஆம் தேதி கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு பொது தேர்வு கணக்கு பாடத்திற்கான தேர்வு அறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்ட ஒரு ஆசிரியருக்கு உடல் நிலை சரியில்லாமல் தேர்வு கண்காணிப்பு பணிக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதனால், அந்த ஆசிரியருக்கு பதிலாக வெட்டன்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளியில், பள்ளி மேலாண்மைக்குழு நியமனம் செய்யப்பட்டு பணிபுரிந்து வரும் ஆசிரியர் வி. மகேஷ்வரன் அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலரின் ஒப்புதலோடு கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் தேர்வு அறை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டு தேர்வு அறையில் பணிபுரிந்துள்ளார். அந்த தேர்வு அறையில் தனியார் மெட்ரிக் பள்ளி மாணவிகள் தேர்வு எழுதியதியுள்ளனர். அந்த அறையில் இருந்த மாணவிகளில் இரண்டு மாணவிகள் முறைகேடாக ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொண்டும், விடை தாள்களை பரிமாற்றம் செய்து கொண்டும் தேர்வு எழுதியதை தேர்வுப் பணியில் இருந்த ஆசிரியர் மகேஷ்வரன் கண்டுபிடித்து இது போன்று செய்யக்கூடாது இனி இப்படி செய்தால் வெளியில் அனுப்பி விடுவேன் என்று கூறியதாக கூறப்படுகிறது.
ஆனால், அந்த மாணவிகள், சிலர் தூண்டுதலின் பேரில், தேர்வு அறையில் ஏதோ பாலியல் சீண்டல்கள் நடந்ததாக ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திட்டமிட்டு கொடுத்த புகாரின் பேரில் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 2016ஆம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி மாற்றுத்திறனாளி ஆசிரியரை கைது செய்யும்போது காவல்துறை ஆய்வாளர் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டத்தை கடைபிடித்து உள்ளாரா என்பதை காவல் ஆய்வாளர் வெளிப்படையாக தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு, 2016 மாற்றுத்திறனாளிகளுக்கான தனி சட்டத்தை கடைபிடிக்காமல் ஒரு மாற்றுத்திறனாளியை கைது செய்து இருந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், பொய் புகாரில் கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் மகேஷ்வரன் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பொய்யான புகாரை கொடுத்த பள்ளி மாணவி வழக்கை திரும்ப பெற வேண்டும். இவைகளை மீறும் பட்சத்தில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க சார்பில் மாற்றுத்திறனாளி ஆசிரியருக்கு நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ. தங்கம் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.