வேலூர் மாநகரை சேர்ந்தவர் வழக்கறிஞர் வேலு. இவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் நிறுத்தி 15 நாள் சிறையில் அடைத்துள்ளார் காட்பாடி காவல்நிலைய ஆய்வாளர் புகழேந்தி. இதுதொடர்பாக நவம்பர் 15ந்தேதி மாலை வேலூர் பார் அசோசியேஷன், வழக்கறிஞர்கள் சங்கம், பெண் வழக்கறிஞர்கள் சங்கம் இணைந்து ஒரு கூட்டம் போட்டுள்ளனர்.

அந்த கூட்டத்தில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் ஒரு வழக்கறிஞரை கைது செய்து சிறையில் அடைத்த புகழேந்தியை, காட்பாடியில் இருந்து பணிமாற்றம் செய்யாதவரை நாங்கள் நீதிமன்ற படிக்கட்டு ஏறமாட்டோம். தொடர் நீதிமன்ற புறக்கணிப்பு செய்கிறோம் என அறிவித்துள்ளனர்.
அதேபோல், இது தொடர்பாக வேலூர் மாவட்டத்தை நிர்வாகம் செய்யும் உயர்நீதிமன்ற நீதிபதியை சந்தித்து இந்த விவகாரம் தொடர்பாக முறையிடவும் முடிவு செய்துள்ளனர். அதோடு, மாவட்டம் முழுவதுமுள்ள வழக்கறிஞர்கள் சங்கங்கள், பார் அசோசியேஷன்கள் இந்த நீதிமன்ற புறக்கணிப்புக்கு ஆதரவு தரவேண்டும் எனக்கேட்பது என இந்த அமைப்புகள் முடிவு செய்து அறிவித்துள்ளன.