சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து தொடங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. அதன்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மற்றொரு புறம் அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் 'தமிழகம் மீட்போம்' என்ற தலைப்பில் காணொளி மூலம் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துரையாடி வருகிறார். மேலும், தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் மாவட்டந்தோறும் சென்று தேர்தல் பரப்புரை செய்து வருகின்றனர்.
அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் தனது முதற்கட்ட தேர்தல் பரப்புரையை மதுரையில் தொடங்கி விருதுநகர், தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று பரப்புரை செய்தார்.
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பெரியசோரகையில் உள்ள சென்றாயபெருமாள் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது முதல்வருக்கு பரிவட்டம் கட்டி மரியாதை தரப்பட்டது. அதைத் தொடர்ந்து, தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து சட்டமன்றத் தேர்தலுக்கான பரப்புரையைத் தொடங்கினார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சாலையில் நடந்து சென்றவாறே வாக்கு சேகரித்தார். இந்த தேர்தல் பரப்புரையின் போது அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முதல்வருடன் உடனிருந்தனர்.
தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.