போலி வாரிசு சான்றிதழ் வழங்கிய வருவாய்த்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாப்பூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் கடந்த 1970-ம் ஆண்டு மரணமடைந்தார். இவரது சொத்துக்கள் தொடர்பான வழக்கு சென்னை செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்ட தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில், தான் கந்தசாமியின் மகன் என்று கூறி வாரிசு சான்றிதழ் ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்தச் சான்றிதழ், 1990- ம் ஆண்டு மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது, இந்தச் சான்றிதழ் போலியானது என்று எதிர் தரப்பு வக்கீல் வாதிட்டார். இதையடுத்து, அந்தச் சான்றிதழ் உண்மையானதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மயிலாப்பூர் தாசில்தாருக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் அந்தச் சான்றிதழ் போலியானது என்று கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் தலைநகரான‘மெட்ராஸ்’என்பது 1994- ம் ஆண்டு சென்னை என்று மாற்றப்பட்டது. இந்தச் சான்றிதழ் 1990- ம் ஆண்டு வாங்கப்பட்டுள்ளது. சான்றிதழில் மெட்ராஸ் என்பதற்குப் பதில் சென்னை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தாசில்தார் அலுவலக முத்திரையிலும் சென்னை என்றே உள்ளது. கந்தசாமியின் முகவரியிலும் சென்னை என்றே உள்ளது. எனவே, இந்தச் சான்றிதழ் போலியானது என்று அரசு சிறப்பு வக்கீல் தெளிவுபடுத்தியுள்ளார்.
மனுதாரர் போலியான ஆவணங்களுடன் இந்த நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது வக்கீல் இந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறினார். ஆனால், இதை ஏற்க முடியாது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். போலிச் சான்றிதழ் கொடுத்த வருவாய்த்துறை அதிகாரிகள் யார்? என்பதை போலீசார் விசாரணை நடத்தி, அந்த அதிகாரிகள் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவேண்டும். போலிச் சான்றிதழ் பெற்ற மனுதாரர் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும். இதுகுறித்து வருகிற ஜூலை மாதம் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.