முதல் நாள் இரவில் மகனும், மறுநாள் அதிகாலையில் தந்தையும் மர்மமான முறையில் இறக்க, போலீசார் தாக்கியதாலே இந்த இரு மரணங்களும் நிகழ்ந்திருக்கின்றது என காவல்துறைக்கு எதிராக சாத்தான்குளம் பகுதி மக்கள் போராட்டத்தினை நடத்தியுள்ள நிலையில், பொதுமக்கள் கூறுவதுபோல், இறந்த இருவரும் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் காயங்கள் இருக்க வாய்ப்புண்டு என இரு உடல்களிலும் காயங்கள் இருக்கின்றனவா என பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளார் கோவில்பட்டி ஜே எம் 1 மாஜிஸ்ட்ரேட்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காமராஜர் சிலை வடக்குபுறத்தில் செல்போன் கடை நடத்தி வருபவர் பென்னிக்ஸ். ஊரடங்கின்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தினை தாண்டியும் கடை திறந்திருப்பதாகக் கூறி, கடந்த சனிக்கிழமையன்று இவரையும், இவரது தந்தையான பனைமர வியாபாரி ஜெயராஜையும் அழைத்து சென்று சாத்தான்குளம் காவல் நிலையத்தார் தாக்கி வழக்கு பதிந்து கோவில்பட்டி சிறைக்கு அனுப்பியதாக கூறப்படுகின்றது. காயங்கள் மிகுந்த தந்தை ஜெயராஜ் காவல் பாதுகாப்புடன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், கிளை சிறையிலிருந்த மகன் பென்னிக்ஸ் நேற்றிரவு மர்மமான முறையில் உயிரிழந்தார். இதே வேளையில் இன்று அதிகாலையில் மருத்துவமனையிலிருந்த தந்தை ஜெயராஜூம் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தலைமையில், எஸ்.ஐ.-க்கள் பாலகிருஷ்ணனும், ரவிகணேஷ் உள்ளிட்ட சாத்தான்குளம் போலீசார் தாக்கியதாலே இவர்கள் இருவரும் இறந்துள்ளனர் எனவே, இருவரையும் தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், உரிய நிவாரணம் வழங்க வேண்டியும் இறப்பிற்கு நியாயம் கேட்டு கடையடைப்பை நடத்தினர் சாத்தான்குளம் பகுதி மக்கள்.
இதே வேளையில், மர்மமான முறையில் இறந்த இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, பிண பரிசோதனை பிரிவு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, இந்நிலையில், தாக்கிய காவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இருவரின் பிணத்தையும் வாங்குவோம் என உறவினர்கள் கோரிக்கை வைத்த நிலையில், காவல்துறை தாக்கியதில் உடல்களில் ஏதேனும் காயம் உள்ளதா என்பது குறித்து அறிய, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையிலுள்ள பிரேத பரிசோதனை மையத்திற்கு சென்று உடல்கள் இரண்டையும் ஆய்வு செய்துள்ளார் கோவில்பட்டி ஜே எம் 1 மாஜிஸ்ட்ரேட்டான பாரதிதாசன். எனினும், இப்பகுதியில் பதட்டம் தனியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.