தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் தொடங்கிய நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறையைச் சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக பேரவையில் இன்று (19/03/2020) நடந்த விவாதத்தின் போது பேசிய முதல்வர் பழனிசாமி, "கரோனா அச்சம் காரணமாக சிறு தொழில்கள் எங்கும் மூடப்படவில்லை; மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளன. சென்னையில் 42 லட்சம் வீடுகளில் ரூபாய் 4,300 கோடியில் ஸ்மார்ட் மின் மீட்டர்கள் அமைக்கப்படும். கடலோர மாவட்டங்களின் மின் கம்பங்கள் சேதத்தை தடுக்க புதைவட கம்பிகள் 200 கி.மீ.க்கு அமைக்கப்படும். ஊரகப்பகுதிகளில் 355 கி.மீ.க்கு ரூபாய் 213 கோடியில் சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படும். ரூபாய் 177 கோடியில் 1,200 சிறு பாலங்கள் கட்டப்படும்.
கோவை, மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திறன்மிகு போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்படும். சென்னை உள்பட அனைத்து மாநகராட்சிகளிலும் ரூபாய் 1,000 கோடியில் சாலை வசதிகள் சீரமைக்கப்படும். ஊரகப்பகுதிகளில் 299 சாலைகள் சுமார் ரூபாய் 500 கோடியில் மேம்படுத்தப்படும். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூபாய் 14,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று "துப்புரவு பணியாளர் இனி தூய்மை பணியாளர்கள்" என அழைக்கப்படுவர். இவ்வாறு பேரவையில் பேசினார்.