இங்கு எதுவுமே இன்னும் தொடங்கவில்லை. தொழில் புரிவோர் இயல்பு வாழ்க்கையை எப்போது வாழ்வார்கள் என்றும் தெரியவில்லை. இந்த நிலையில் மத்திய அரசு அறிவிக்கும் அறிவிப்புகள் மன வேதனையை ஏற்படுத்துகிறது என பா.ஜ.க கூட்டணிக் கட்சியான தமிழ் மாநில காங்கிரஸ் கூறியுள்ளது. இது தொடர்பாக த.மா.கா இளைஞர் அணித் தலைவர் ஈரோடு யுவராஜா விடுத்துள்ள அறிக்கையில்,
"கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் பொருட்டு அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கு பலரது வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுள்ளது. பலர் பணி இழந்தும், ஊதியம் கிடைக்காமலும் துயருற்று வருகின்றனர். பெரும்பாலான நிறுவனங்களின் செயல்பாடு அப்படியே அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது,
வணிக நிறுவனங்கள், மால்கள், திரையரங்குகள், பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டு இப்போதுதான் ஒன்றன் பின் ஒன்றாகச் செயல்பட அரசு அனுமதியளித்து வருகிறது. இதனால் வியாபாரம் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளது. ஏற்கனவே கரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கின் காரணமாக மார்ச் 15 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அனைத்து வகையான பொருட்களுக்கும் ஜி.எஸ்.டி வரியை மத்திய அரசு ரத்து செய்திருந்தது. ஊரடங்கு தளர்வை தொடர்ந்து இப்போதுதான் மக்கள் தங்கள் பணிக்கு திரும்பியிருக்கிறார்கள். இன்று முதல் பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரி விதிப்பு அமலுக்கு வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த வரி விதிப்பு முறையை இன்னும் மூன்று மாதங்களுக்கு நிறுத்தி வைக்குமாறு பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் இயங்கும் மத்திய அரசை த.மா.க இளைஞரணி சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்" எனக் கூறியுள்ளார்.