திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாசில்தாராக இருந்தவர் ரேணுகா. கணவரை இழந்த ஒருவர் அதற்கான சான்றிதழ் வாங்குவதற்காக மனு செய்துள்ளார். அவரை கடந்த இரண்டு மாதமாக அலைக்கழித்துள்ளார் ரேணுகா. இதுப்பற்றி கேள்வி எழுப்பிய அந்த பெண்மணியின் உறவினர் கோபாலகிருஷ்ணனிடம், 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தந்தால்தான் சான்றிதழ் தருவேன் என லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியான அவர் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி சரவணகுமாரிடம் புகார் தெரிவித்தார்.
அவர்கள் தந்த ரசாயனம் தடவிய தாள்களை தாசில்தார் ரேணுகாவிடம் தர அவரும் அதை வாங்கி தனது பர்சில் வைத்தார். அதன்பின் பணத்தோடு கைது செய்து அவரை சிறைக்கு அனுப்பியது லஞ்ச ஒழிப்புத்துறை. இதுபற்றிய அறிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியது லஞ்ச ஒழிப்புத்துறை.
அந்த அறிக்கையின் அடிப்படையிலும், லஞ்ச வழக்கில் கைது செய்தால் சஸ்பெண்ட் செய்யவேண்டும் என்கிற விதியின் அடிப்படையில், கடந்த அக்டோபர் 12ந்தேதி மாலை தற்காலிக பணிநீக்கம் ஆணையை அவரது இல்ல முகவரிக்கு அனுப்பிவைத்துள்ளது வருவாய்த்துறை.