திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா இன்று (29/11/2020) காலை 04.30 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 06.00 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
இந்த ஆண்டு கரோனா தடை உத்தரவு அமலில் இருப்பதால் தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலையேறுதல், கிரிவலம் வருதல் போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. மேலும் வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் நகருக்குள் வராதபடி மாவட்ட காவல்துறையினர் தலைமையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை முதல் திருவண்ணாமலை நகர பொதுமக்கள் பக்தர்கள் மாட வீதியை கிரிவலம் வந்து கொண்டிருந்தனர். குறைந்த அளவு பக்தர்கள் வருகை தந்த போது போலீசார் ஒவ்வொருவராக அனுப்பி வைத்தனர். பின்பு அதிகமான கூட்டங்கள் வர தொடங்கியதால் தடுத்து நிறுத்தினர்.
இதனை அறிந்த பா.ஜ.க.வின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் பா.ஜ.க.வினர். இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள், கோயில் மாட வீதியில் காந்தி சிலை முன்பு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளும் கட்சியான அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திறந்து திறந்து விடு பக்தர்களுக்காக மாட வீதியை திறந்து விடு என கோஷங்கள் எழுப்பினர். முக்கிய பிரமுகர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி வழங்கும் காவல்துறையினர், பொதுமக்களை மாட வீதியில் கூட அனுமதிக்காதது ஏன்? என கோஷமிட்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூறியதைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர்.
திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி அரவிந்த், பா.ஜ.க. மாவட்ட தலைவரிடம் 'அதிகளவு பக்தர்கள் வரும் பொழுது மட்டுமே தடுத்து நிறுத்துகிறோம். குறைவான பக்தர்கள் வரும் போது அவர்களை மாட வீதியை வலம் வர அனுப்பிக் கொண்டிருக்கிறோம்' என்றார். அதனை ஏற்றுக்கொள்ளாத பா.ஜ.க., இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், மாடவீதி சாலையை தடுப்பு போட்டு தடுக்காமல் முழுவதும் திறந்து விட வேண்டும், அண்ணாமலையாருக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்கின்றனர். அவர்கள் மாடவீதியில் வலம் வந்த பின்புதான் விரதத்தை முடிப்பார்கள் அதனால் மாடவீதியில் வலம் வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையேற்ற காவல்துறையினர், பக்தர்கள் மாட வீதியில் எங்கும் அமரவோ, நிற்கவோ கூடாது என்கிற கட்டுப்பாடுகளை விதித்து மாட வீதியில் மட்டும் வலம் வருவதற்கு அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மாட வீதியை வலம் வந்துக் கொண்டு இருக்கின்றன.