ரயிலில் 22 கிலோ கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான மதுரையைச் சேர்ந்த கணவன், மனைவியை சேலம் காவல்துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து சேலம் சூரமங்கலம் ரயில் நிலையம் வந்த ஒரு ரயிலில், கடந்த ஏப்ரல் 8- ஆம் தேதி, ரயில்வே காவல்துறையினர் திடீர் சோதனை செய்தனர். அந்த ரயிலில் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் ஒரு பெரிய பார்சல் வைத்திருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள், மதுரை மாவட்டம் முத்துப்பட்டி அருகே உள்ள வீராமுடியான் பகுதியைச் சேர்ந்த கண்ணன் ( வயது 45) மற்றும் சித்ரா (வயது 39) என்பதும், இருவரும் கணவன், மனைவி என்பதும் தெரிய வந்தது. அவர்கள் கொண்டு வந்திருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது, அதில் 22 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து, சேலம் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்ததோடு, கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். தற்போது நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பிடிபட்ட தம்பதியினர், அதிக லாபமீட்டும் நோக்கத்துடன் கஞ்சா கடத்தி வந்ததும், பொது சுகாதாரம் பாதிக்கும் வகையில் நடந்து கொள்ள முயற்சித்ததாலும் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ரயில்வே இருப்புப்பாதை காவல்துறையினர், சேலம் மாநகர துணை ஆணையர் மாடசாமி ஆகியோர் பரிந்துரை செய்தனர்.
அதன்பேரில், சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து, சித்ரா, கண்ணன் ஆகிய இருவரையும் மருந்து சரக்கு குற்றவாளி என்ற பிரிவில் குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் வியாழக்கிழமை (மே 26) கைது செய்தனர்.