தமிழ்நாடு பவர் கிரிட் நிறுவனம் பல்வேறு மாவட்டங்களில் உயர்மின் கோபுரம் அமைத்து வருகிறது. குறிப்பாக ஈரோடு, திருப்பூர், கோவை, நாமக்கல், தருமபுரி மாவட்டங்களில் இந்த உயர்மின் கோபுரங்களை விவசாய விளைநிலங்கள் வழியாக அமைத்து வருகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பல்வேறு வகையான போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
மாநில முதல்வர் எடப்பாடி வரை நேரில் சென்று மனு கொடுத்து விட்டார்கள். ஆனாலும் உயர் மின் கோபுரங்கள் விவசாய விளைநிலங்கள் வழியாக அமைப்பதை தடுத்து நிறுத்த முடியவில்லை. விவசாயிகள் தொடர்ந்து தங்களது விளை நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபடுவதை தடுத்தும் பார்த்தார்கள். ஆனால் வலுக்கட்டாயமாக போலீசை வைத்து விவசாயிகளை அப்புறப்படுத்திவிட்டு ஒவ்வொரு உயர் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
விவசாயிகளும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள், விவசாய குடும்பத்தைச் சேர்நத பெண்கள் கையில் சட்டியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
"பறிக்காதே... பறிக்காதே... விளை நிலங்களை பறிக்காதே.. உடனே நிறுத்து... உடனே நிறுத்து... உயர் மின் கோபுரம் அமைப்பதை உடனே நிறுத்து... உடனே நிறுத்து... நான் ஒரு விவசாயி மகன் என்று கூறும் முதல்வர் எடப்பாடியே... உழவன் மகன் ஆட்சியிலேயே... உழவன் கையில் திருவோடு.... வெட்கக்கேடு... வெட்கக்கேடு எடப்பாடியே உன் ஆட்சிக்கு வெட்கக்கேடு... வெட்கக்கேடு...'' என கோஷமிட்டதோடு ஆட்சியர் அலுவலகத்திலேயே காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயர் மின் கோபுரத்தால் பறிபோகும் விவசாயிகளின் விளை நிலங்களுக்கு தற்போதைய மார்கெட் மதிப்பு அடிப்படையில் விலை நிர்ணயம் செய்து நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை பறிக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுத்தனர். விவசாயிகளின் காத்திருக்கும் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.