திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா சோலூர் கிராமத்தில் புதியதாக கல்குவாரி அமைக்க கனிம வளத்துறை முடிவு செய்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு வருவாய்த்துறை, தீயணைப்பு துறை போன்ற பல்வேறு துறைகளும் சில விதிகளை மீறி அனுமதி கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாணியம்பாடியில் உள்ள மாசு கட்டுப்பாட்டு அலுவலகமும் கல்குவாரிக்கு அனுமதி தர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த கல்குவாரி அமையும் இடத்துக்கு அருகில் நரிக்குறவர்கள் வீடுக்கட்டியும், குடிசைப்போட்டும் வாழ்ந்து வருகின்றனர். அதோடு அக்கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பலரின் விவசாய நிலமும் உள்ளது. குவாரி அமைந்தால் விவசாய நிலம் பாதிக்கப்படுவதோடு, நரிக்குறவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் நரிக்குறவர்கள் வாணியம்பாடி மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை பிப்ரவரி 13 ந்தேதி முற்றுகையிட்டு அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கல்குவாரி அமைய அனுமதி வழங்கக்கூடாது என மனு தந்தனர். இதையடுத்து அதிகாரிகள் அளித்த உறுதியின் பேரில் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.