திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கிராமிய காவல் நிலைய ஆய்வாளராக பெண் ஒருவர் பணியாற்றி வந்தார். கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அவர் தனது காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் அவருக்குத் திடீரென சளி, காய்ச்சல் இருந்ததால் பி.சி.ஆர். சோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் தனிமைப்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். மேலும் அவர் பணியாற்றிய காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அங்கு பணியில் இருந்த காவலர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் அனைவருக்கும் நெகட்டிவ் என உறுதியான பின் காவல்நிலையம் திறக்கப்பட்டது.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த அந்தப் பெண் ஆய்வாளருக்கு, அடுத்தடுத்து எடுக்கப்பட்ட டெஸ்ட்களில் நெகட்டிவ் என ரிசல்ட் வந்ததைத் தொடர்ந்து, கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தது உறுதியானது. இதையடுத்து அவர் மே 8- ஆம் தேதி காலை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவரை தொடர்ந்து கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த மேலும் 4 பேர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவர்கள். அவர்களை இன்னும் 7 நாட்களுக்கு வீட்டில் தனிமையில் இருக்கச் சொல்லியுள்ளனர் மருத்துவர்கள்.
கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடுத்தடுத்து குணமாகி வீட்டுக்குச் செல்வது மருத்துவர்களை, அதிகாரிகளை, நோய்த் தாக்கியவர்களின் குடும்பத்தாரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.