16 ஆவது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள மக்கள் போட்டிகள் நடைபெறும் அனைத்து மைதானங்களிலும் ஐபிஎல் போட்டிகளை திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர்.
ஆன்லைனில் இணையதளம் மூலமாக விற்கப்படும் டிக்கெட்கள் விற்பனை ஆரம்பித்த சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்து விடுகிறது. அதேவேளையில் நேரடியாக விற்கப்படும் டிக்கெட்களை வாங்குவதற்கும் கூட்டம் அலை மோதுகிறது. ஆனால் சில மர்ம நபர்கள் கூலிக்கு ஆட்களை வைத்து டிக்கெட்களை வாங்கி அதை கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதனைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் காவல்துறையினர் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்களை கள்ளச் சந்தையில் விற்ற 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேப்பாக்கத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக விலைக்கு ஐபிஎல் டிக்கெட்களை விற்ற 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 9 பேரிடம் இருந்து 19 டிக்கெட்களும் ரூ.10 ஆயிரம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.