
தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று (14.04.2021) அறிவித்திருந்த நிலையில், தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது.
குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பொழிந்தது. அதேபோல் ராணிப்பேட்டை, வாலாஜா பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மயிலாடுதுறையில் சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், வைத்தீஸ்வரன் கோயில் நடை, வேலூரில் காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பொழிந்தது. சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் மழை பெய்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் இடியுடன் பலத்த மழை பெய்து வருகிறது. வேளச்சேரி, கிண்டி, சைதாப்பேட்டை, கே.கே.நகர், ஆதம்பாக்கம், சூளைமேடு, வடபழனி, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அசோக்நகர், மேற்கு மாம்பலம், தேனாம்பேட்டை, பாரிமுனை, மெரினா, மந்தைவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், ஆர்.ஏ.புரம், பல்லாவரம், பம்மல், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மயிலாப்பூரில் திருவிக சாலையில் பலத்த காற்றால் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. அதேபோல் பெருங்களத்தூர், வண்டலூர், மறைமலை நகர் உள்ளிட்ட இடங்களிலும் காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. காங்கேயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவில் மழை பொழிந்தது. தர்மபுரி மாவட்டம் சுற்றுவட்டார ஊர்களில் விட்டுவிட்டு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது.