
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக சமீபத்தில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி, தமிழகத்தில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவிகிதம் முதல் 150 சதவிகிதம் வரை அதிகரிக்க உள்ளது. திடீர் சொத்து வரி அதிகரிப்பிற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சொத்துவரி உயர்வு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த கே.என்.நேரு, "1989களில் 23.94 காசுகள் விற்ற பெட்ரோல் 348.75 மடங்குகள் அதிகரித்து இன்றைக்கு 107.43 காசுகளுக்கு விற்பனையாகிறது. நிலத்தின் வழிகாட்டு மதிப்பீடும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. தமிழகத்தின் நகராட்சியில் மொத்தமுள்ள 77 லட்சத்து 86ஆயிரத்து 178 குடியிருப்புகளில் 44 லட்சத்து 53ஆயிரத்து 976 குடியிருப்புகளுக்கு வெறும் 25 சதவிகிதம் மட்டுமே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல 19 லட்சத்து 23 ஆயிரத்து 399 குடியிருப்புகளுக்கு வெறும் 50 சதவிகிதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. பொருளாதார அடிப்படியில் பார்த்தால் 83.18 சதவிகித மக்களை இந்த வரி பெரிதும் பாதிக்காது. ஒரு லட்சத்து 9ஆயிரத்து 417 குடியிருப்புகளுக்கு மட்டும் அதிகபட்சமாக 150 சதவிகித வரி விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7சதவிகித வீடுகளுக்கு மட்டுமே 100 முதல் 150 சதவிகிதம்வரை சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.