Skip to main content

பரிசல் கவிழ்ந்து பெண் மீனவர் உயிரிழப்பு

Published on 12/01/2023 | Edited on 12/01/2023

 

nn

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரசூரை அடுத்துள்ளது மாக்கினா கோம்பை. அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் 42 வயது ஆரோக்கியமேரி.  இவரது கணவர் அந்தோணிசாமி. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். அந்தோணிசாமி கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆரோக்கியமேரி தினமும் பவானி ஆற்றில் மீன் பிடிக்க செல்வது வழக்கம். அதுபோல் நேற்று 11ந் தேதி மீன்பிடிக்க தனது தங்கை மல்லிகாவுடன் ஆற்றுக்கு சென்றார்.

 

இதற்காக ஆரோக்கியமேரி பரிசலை எடுத்துக்கொண்டு சென்றார். சத்தி ஈஸ்வரன் கோவில் படித்துறையில் இறங்கி பவானி ஆற்றில் பரிசலைப் போட்டு தங்கையுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். நேற்று மாலை அரியப்பம்பாளையம் அம்மன் கோவில் அருகே பவானி ஆற்றுத்தடுப்பு அணையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ஆரோக்கியமேரி ஆற்றின் நடுவில் உள்ள தடுப்பணை சுவரைத் தாண்டி செல்ல, பரிசலை தூக்கி போட்டு அதில் ஏற முயன்றபோது பரிசலானது திடீரென நிலைதடுமாறி தலைகுப்புற கவிழ்ந்து. ஆரோக்கியமேரி நீரில் மூழ்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது தங்கை மல்லிகா அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ஆரோக்கியமேரியை தூக்கி மணல்மேட்டில் படுக்க வைத்தனர்.

 

உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில் வரும் வழியிலேயே ஆரோக்கியமேரி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட போது பெண் மீனவர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்