ஈரோடு மாவட்டத்தில் நீர்நிலைகளில் ஜவுளி சாயக்கழிவு கலப்பதை தடுக்க நிரந்தரத் திட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறினார்.
ஈரோடு மாநகராட்சி சார்பில் மாணிக்கம்பாளையம் பகுதியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாமை அவர் இன்று துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் முத்துசாமி, “கடந்த ஆண்டு 46 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதில் 41,000 பேர் பயனடைந்தனர். 112 பேர் உயர் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். நடப்பாண்டும் 46 முகாம்கள் நடைபெற உள்ளன. முகாம்களில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கேன்சர் உட்பட 17 வகையான நோய்கள் கண்டறிய வசதி உள்ளது. மருத்துவ முகாம்கள் நடைபெறுவதன் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு தெரியாமல் இருக்கும் நோய்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
ஈரோடு மாவட்டத்தில் சாயக் கழிவு மற்றும் தோல் கழிவுகள் கலப்பதால் புற்றுநோய் அதிகரிப்பதாகப் புகார்கள் வருகின்றன. எனவே நீர்நிலைகளைப் பாதுகாக்க நிரந்தரத் தீர்வு ஏற்படுத்த திட்டம் உருவாக்கப்படும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது ஈரோடு மாநகராட்சிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீட்டை நகராட்சி வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அப்போது அறிவித்தார். அதன்படி திட்டங்கள் உருவாக்கப்பட்டு அனுப்பப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு திட்டத்திற்கும் நிதி வருகிறது. ஈரோடு மேற்கு தொகுதியில் ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டத்தின் கீழ் பைப் லைன் அமைக்கப்படாத பகுதிகளில் பைப்லைன் அமைக்க அரசிடம் சிறப்பு நிதி கேட்டுள்ளோம்” என்றார்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் ராஜகோபால் சுங்காரா, எம்.பி கணேசமூர்த்தி, எம்.எல்.ஏ ஈவிகேஎஸ். இளங்கோவன், மேயர் நாகரத்தினம் சுப்ரமணியம் மற்றும் மருத்துவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.