![Three thief arrested](http://image.nakkheeran.in/cdn/farfuture/iM-drcRaQ-s-omF1qZDDYYEvh8Tr45GhXKFe7JD_WSE/1602761028/sites/default/files/inline-images/cop_6.jpg)
மக்களை அச்சுறுத்தும் வழிப்பறி கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக நடமாட தொடங்கி விட்டனர். ஈரோடு மாவட்டத்தில் பல ஊர்களில் வழிப்பறி திருடர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். ஈரோடு கோட்டை முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் நடராஜன். இவர் நேற்று மாலை அகில் மேடு இரண்டாவது வீதியில் ஷேர் ஆட்டோ நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த மூன்று பேர் திடீரென நடராஜனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த விலை உயர்ந்த ஸ்மார்ட் ஃபோன் மற்றும் ரூபாய் 2,000 பணத்தை அவரிடமிருந்து பறித்து மேலும் அவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதில் காயமடைந்த நடராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வந்தனர். அவர்கள் பள்ளிபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்கிற சுரேஷ், கருங்கல்பாளையத்தை சேர்ந்த கார்த்தி என்கிற டியூனிங் கார்த்தி, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி என்கிற ஸ்னேக் ரவி ஆகியோர் என்பதை கண்டுபிடித்து அந்த மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்த செல்ஃபோன் மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் இது போன்று வேறு யாரிடமெல்லாம் கைவரிசை காட்டி வழிப்பறியில் ஈடுபட்டார்கள் என்பது குறித்து போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.