சாலைப்பணியாளர்கள் சங்க முப்பெரும் விழா வருகிற டிசம்பரில் நடத்துவது என ஈரோட்டில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சண்முகராஜா தலைமை தாங்கினார். மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் பெருமாள், ராஜா சிதம்பரம், சண்முகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, டிப்ளமோ சிவில் படித்துவிட்டு பதவி உயர்வுக்காக காத்திருக்கும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், 4 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவித்த தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது, சங்கத்தின் வெள்ளி விழா, முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழா, மாநில தலைவரின் பொதுவாழ்வு விழா ஆகிய முப்பெரும் விழாவினை வருகின்ற டிசம்பர் மாதம் நடத்துவது எனவும், இக்கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக அழைப்பது, சாலைப்பணியாளர்களுக்கு புதிய ஊதிய நிர்ணயம் செய்து நிலுவை தொகை வழங்கிட வேண்டும், சீருடை, சலவைப் படி, விபத்துப்படி உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறையில் காலியாக உள்ள 7500 பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.