![Three arrested under goondas act in salem](http://image.nakkheeran.in/cdn/farfuture/XCg3L5SMJnyZcB8PeD-Rp5uVwdfjpRB4LgmHmpb2Pyk/1651557995/sites/default/files/inline-images/th-1_3157.jpg)
சேலத்தில், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரவுடிகள் மூன்று பேரை காவல்துறையினர் ஒரே நாளில் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
சேலம் சின்னதிருப்பதி காளியம்மன் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் பண்டிகை நடந்தது. அப்போது, காந்தி நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரை, சின்னதிருப்பதி அண்ணாசாலையைச் சேர்ந்த யாசின் (26), ஹரிஷ் கோகுல், சின்ன முனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த தேவராஜ் ஆகியோர் கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. மூவரும், ஆனந்தராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். பொதுமக்கள் சிலர் தலையிட்டு இருதரப்பையும் விலக்கி விட்டனர்.
இது ஒருபுறம் இருக்க, ஏப். 17ம் தேதி இரவு ஆனந்தராஜ், வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தபோது, யாசின் உள்ளிட்ட மூவரும் வீடு புகுந்து கத்தி மற்றும் வீச்சரிவாளால் தாக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட ஆனந்தராஜ் ஓடிச்சென்று கதவை உள்பக்கமாக மூடிக்கொண்டார். இதனால் அவர்கள் வீட்டின் ஒரு பகுதியில் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் காவல்துறையினர் மேற்படி மூவரையும் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின்பேரில் மூவரும் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். வீட்டுக்கு தீ வைப்பு சம்பவத்திற்கு முதல் நாள், சின்ன திருப்பதி பெருமாள் கோயில் அருகே வந்த சின்னகொல்லப்பட்டியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவரை கத்தி முனையில் மிரட்டி, அவரிடம் இருந்த 5000 ரூபாயை பறித்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
யாசின், ஹரிஷ் கோகுல், தேவராஜ் ஆகிய மூவரும் மக்கள் நெருக்கம் உள்ள பகுதியில் வீட்டிற்கு தீ வைத்து, பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளனர். இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். அதன்பேரில், மூவரையும் காவல்துறையினர் திங்கள் கிழமை (மே 2) குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஒரே நாளில் மூன்று பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, ரவுடிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.