வேலூர் மாவட்டம் காட்பாடி வழியாக ஜார்கண்டில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் காட்பாடி ரயில்வே போலீசார் மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் பயணிகள் பெட்டியில் 14 மூட்டைகளில் கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்து.
கேரளாவை சேர்ந்த ஆகாஷ், மனோஜ் குமார், பிரதீஷ் ஆகிய மூன்று பேரை கைது செய்து கடத்தி சென்ற 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 3 பேரை போதை தடுப்பு நுண்ணறிவு பிரிவினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்கு பதிவு செய்து இவர்களை காட்பாடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்தியாவில் ஜார்கண்ட், தெலுங்கானா, ஆந்திரா, ஒரிசா மாநிலங்களில் கஞ்சா அதிகளவு பயிரிடப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழ்நாடு, கேரளாவுக்கு தெலுங்கானா, ஆந்திரா, ஜார்கண்ட் மாநில பகுதிகளிலிருந்து கஞ்சா மூட்டைகள் ரயில்கள் மூலமாக வருகிறது. ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர்கள் கடந்து வரும் இந்த ரயிலில் ரயில்வே போலீசார் இருக்கின்றனர், இவர்கள் யாரும் இதனைச் சோதனை போட்டு பிடிப்பதில்லை.
சில மாநிலங்களை கடந்து இந்த ரயில்கள் வருகிறது. எந்த மாநில போலிஸாரும் கஞ்சா கடத்திவருவதை தடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டு தமிழ்நாடு காவல்துறையிலிருந்து எழுகிறது. தமிழ்நாட்டுக்குள் இந்த ரயில்கள் வரும்பொழுது சந்தேகம் ஏற்பட்டு காவல் துறைக்கான இன்பார்மர்கள் தகவல் சொல்லியே தமிழ்நாட்டின் இந்த ரயில்கள் நுழைந்ததும் கஞ்சா கடத்துபவர்கள் பிடிக்கப்படுகிறார்கள்.
தமிழ்நாட்டுக்குள் கஞ்சா வரவை முழுமையாக தடுக்க வேண்டும் என்றால் பிற மாநில போலீசரும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் ஆனால் பிற மாநில போலீசார் இந்த விவகாரத்தில் அதிக ஈடுபாடு காட்டுவதில்லை என்கிறார்கள்.