கரூர் மாவட்டம் குளித்தலை ஒன்றியம், நங்கவரம் பேரூராட்சியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை உள்ளூர் இளைஞர் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த சிறுமியை கடந்த 24 ஆம் தேதி இரவு முதல் காணவில்லை. பல இடங்களில் தேடிக் கிடைக்காததால் குளித்தலை காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் கலைவாணி புகார் செய்தார்.
இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை சிறுமி ஊருக்கு அருகாமையில் உள்ள பாசன கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். இதனையடுத்து சடலத்தை மீட்ட குளித்தலை போலீசார் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேதப் பரிசோதனை முடிந்து சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்தபோது, சிறுமியின் மரணத்தில் மர்மம் இருப்பதால் பிரேதத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனறு கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து 29 ஆம் தேதி சிறுமியின் மரணத்திற்கு நியாயம் கேட்டு 500க்கும் மேற்பட்டவர்கள் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்த நிலையில் சிறுமியை தற்கொலைக்கு தூண்டியதாக சவாரி மேட்டைச் சேர்ந்த 6வது வார்டு பேரூராட்சி திமுக கவுன்சிலர் செல்லாண்டி (எ) குணசேகரன்(53), அவரது 18 வயது மகன், குணசேகரனின் மைத்துனர் முத்தையன்(50) ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்கள் மூவரையும் இன்று கைது செய்தனர்.
மேலும் மூன்று பேர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்களையும் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் இளம் பெண்ணின் சடலத்தை வாங்க மாட்டோம் என அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.