கடந்தாண்டை விட இந்தாண்டு தீபாவளிக்கு குறைந்த அளவிலான அரசு பேருந்துகளே இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை, தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், "கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இந்த ஆண்டு குறைவாகவே இயக்கப்படும். கல்வி நிலையங்கள் உள்ளிட்டவை செயல்படாத காரணத்தால் இந்த ஆண்டு குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்படும். சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். சிறப்பு பேருந்துகளுக்காக 13 முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 13 முன்பதிவு மையங்களில் இதுவரை 27 ஆயிரம் பேர் தீபாவளிக்கு வெளியூர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர்.
www.tnstc.in, www.redbus.in, www.paytm.com, www.busindia.com, ஆகிய இணையதளங்களில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு 14,757 பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறப்பு பேருந்துகள் நவம்பர் 11- ஆம் தேதி முதல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பிறகு ஊர் திரும்ப 16,026 பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பிறகு நவம்பர் 15, 16, 18 ஆகிய தேதிகளில் மீண்டும் சிறப்பு அரசுப் பேருந்துகள் இயக்கப்படும்" இவ்வாறு அமைச்சர் கூறினார்.
கடந்தாண்டு 18,544 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு தீபாவளிக்கு முன் 14,757 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.