கங்குவா படத்திற்கு பிறகு சூர்யா தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகும் அவரின் 44வது படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கான போஸ்ட் புரொடெக்சன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படம் அடுத்தாண்டு கோடையில் ரிலீஸாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. சுதா கொங்கராவின் புறநானூறு படத்தில் சூர்யா நடிக்கவிருந்த நிலையில், தற்போது அந்த படத்தை கைவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில் சூர்யாவின் 45வது படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான பூஜை பொள்ளாச்சியை அடுத்து உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்றது. அதோடு கோவையில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில் சூர்யாவின் 45வது படத்தில் சுவாசிகா இணைந்து நடிக்கவுள்ளார். இவர் தமிழில் சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகராக நடித்து கவனம் பெற்றார். அதன் பிறகு நீண்ட நாட்கள் கழித்து தமிழரசன் பச்சைமுத்து இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான லப்பர் பந்து படத்தில் கெத்து தினேஷுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.