திருவண்ணாமலை நகரில் உள்ள அண்ணாமலையார் திருக்கோயில் திருகார்த்திகை தீபத்திருவிழா டிசம்பர் 1ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா வரும் 14ந்தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் 10 ந்தேதி 2662 அடி உயரம்முள்ள மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு நடைபெறவுள்ளது. இதனைக்காண 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தர்களின் பாதுகாப்புக்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அதன்படி மாவட்ட காவல்துறை சார்பில் 9 ஆயிரம் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களை அழைத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ஒரு கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில் திருவிழாவின்போது விடுதியில் தங்க வருபவர்களிடம் வாங்க வேண்டிய ஆவணங்கள் குறித்து விளக்கபட்டது. அதேபோல், தங்குபவர்கள் கொண்டுவரும் லக்கேஜ்களை சோதனையிட வேண்டும் எனச்சொல்லப்பட்டது. சந்தேகப்படும்படி விடுதிகளில் தங்கினால் அவர்கள் பற்றிய தகவலை காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் எனச்சொல்லப்பட்டுள்ளது என்கிற தகவலை காவல்துறை வெளியிட்டுள்ளது.
தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் தீபத்திருவிழா, மாதம் தோறும் பௌர்ணமியன்று, அறை வாடகை பல மடங்கு உயர்த்தி வாங்கப்படுகிறது என்பது பக்தர்களின் குற்றச்சாட்டு. இதனை சீர்ப்படுத்த வேண்டும், விடுதிகளுக்கு தகுந்தார்போல் மாவட்ட நிர்வாகம் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்கிற வேண்டுக்கோள் விடுக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட நிர்வாகம் கண்டுக்கொள்வதில்லை. இதுப்பற்றி காவல்துறை தரப்பில் ஹோட்டல் உரிமையாளர்களிடம் எதுவும் பேசவில்லை என்பது குறிப்பிடதக்கது.
கட்டணம் உயர்த்தி வாங்கப்படுவது பற்றி விடுதி உரிமையாளர்கள் சிலர் நம்மிடம் முன்பு ஒருமுறை கூறியபோது, திருவிழா காலங்களில் காவல்துறை, வருவாய்த்துறை, நகராட்சி உயர் அதிகாரிகள், உயர் அதிகாரிகள் வருகிறார்கள் ரூம்களை புக் செய்து விடுகிறார்கள். அதுவும் முன்கூட்டியே எங்களுக்கு இத்தனை ரூம் எனச்சொல்லிவிடுகிறார்கள். அதற்கான கட்டணத்தை தருவதில்லை. அப்படி வாங்கப்படும் ரூம்களுக்கான கட்டணத்தை நாங்கள் யாரிடம் வசூலிப்பதில்லை. இங்கு ரூம் போட வருபவர்களிடம் தானே. அதனைத்தான் நாங்கள் செய்கிறோம் என்கிறார்.