தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இத்தகைய சூழலில் ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி அருகில் நேற்று முன்தினம் (30.11.2024) மாலை 5 மணி அளவில் கரையைக் கடக்க துவங்கியது. நேற்று இரவு 10.30 மணிக்கும் 11.30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் கரையைக் கடந்தது. இது புதுச்சேரிக்கு அருகில் நிலை கொண்டிருந்தது. இதனையடுத்து ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நேற்று (01.12.2024) காலை 11.30 மணியளவில் வலுவிழந்தது.
இருப்பினும் தமிழகத்தின் பல்வேறு வட மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (02.12.2024) ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வேலூர், சேலம், திருப்பத்தூர், தருமபுரி, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. அதோடு மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட உதகை, கூடலூர், கோத்தகிரி வட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.
அதே போன்று நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் உமா பிறப்பித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு என 5 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளிகளில் மழைநீர் இருந்தால் அதன் சூழ்நிலையைப் பொறுத்து அப்பள்ளி தலைமை ஆசிரியரே விடுமுறை விடுவது குறித்து முடிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் விக்கிரவாண்டி - முண்டியம்பாக்கம் இடையிலான பாலம் துண்டிக்கப்பட்டதை அடுத்து பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் மழை பாதிப்பு காரணமாக இன்று எழும்பூரில் இருந்து திருச்சி செல்லும் சோழன் விரைவுவண்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் செல்லும் ரயிலும், புதுச்சேரியில் இருந்து எழும்பூர் செல்லும் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இருந்து நேற்று (01.12.2024) எழும்பூர் புறப்பட்ட உழவன் விரைவுவண்டி (வண்டி எண் : 16866) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும். எனவே இந்த ரயில் மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் நிலையங்களில் ரயில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் இருந்து நேற்று எழும்பூர் புறப்பட்ட ரயில் (வண்டி எண் : 16180), செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் நிறுத்தங்களில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் இருந்து நேற்றிரவு தாம்பரம் புறப்பட்ட ரயில் (வண்டி எண் : 16176) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும். செங்கல்பட்டில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையில் இருந்து நேற்று புறப்பட்ட சிலம்பு அதிவேக விரைவுவண்டி ரயிலும் (வண்டி எண் : 20682) விழுப்புரம், காட்பாடி வழியாக எழும்பூர் செல்லும். எனவே செங்கல்பட்டில் நிற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும், நாளையும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மண்சரிவு ஏற்படும் அபாயத்தால் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது.