கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த சின்னவடவாடி மற்றும் பெரியவடவாடி கிராமத்தின் இடையே அமைந்துள்ள காட்டுப்பகுதியில் நடுகாட்டு அம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் இக்கோவிலில் இருந்த உண்டியலை, இயந்திரத்தின் மூலம் உடைக்க முயற்சித்துள்ளனர். அப்போது வயல் வெளியில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்த விவசாயிகளுக்கு சத்தம் கேட்டு, ஊர் பொது மக்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த ஊர் பொதுமக்கள் உண்டியல் திருடர்களை பிடிக்க முயற்சித்தபோது, காட்டுப்பகுதியில் தப்பித்து ஓடி சென்றனர். அவ்வாறு தப்பித்து செல்லும் போது, உண்டியலை திருட முயற்சித்த ஒருவர் செல்போனை விட்டு சென்று விட்டார். திருடன் விட்டுச்சென்ற செல்போனில் அவரது புகைப்படமும், உளுந்தூர்பேட்டையில் உள்ள தனியார் வங்கியில் பத்தாயிரம் ரூபாய் பணம் செலுத்தியதற்கான ரசீதும் இருந்துள்ளது. அதே சமயத்தில் ஊர் பொதுமக்கள் வருகின்றனரா? என்று நோட்டம் விடுவதற்காக எல்லைப்பகுதியில், திருடனின் கூட்டாளி ஒருவர் நின்று கொண்டிருப்பதைக் கண்ட பொதுமக்கள், அவரிடம் விசாரிக்கும்போது, இருசக்கர வாகனத்தில் தப்பி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக பொதுமக்கள் துரத்தியதால், இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடிச் சென்றார்.
இதுகுறித்து மங்கலம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், உண்டியல் திருடர்கள் பயன்படுத்திய செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து தீவிர விசாரணை தொடங்கினர். விசாரணை தொடங்கி 12 மணி நேரத்தில் உண்டியலை உடைத்து திருட முயற்சித்த, உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்கு உட்பட்ட கூவாடு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மற்றும் வீரபுத்திரன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து திருடுவதற்காக பயன்படுத்தப்பட்ட, கட்டிங் இயந்திரம், இரும்பை அருக்க கூடிய கத்தி மற்றும் அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர்.
திருட்டு முயற்சி நடந்து சில மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் பாராட்டுகளை தெரிவித்தார்.