ராஜா என்பவர் மதுரை சொக்கிகுளத்தைச் சேர்ந்தவர். உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் இவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘தமிழகத்தில் மத்திய சிறைச்சாலைகள்- 9, மகளிர் சிறைகள்- 3, மாவட்ட சிறைகள்- 9, சப்-ஜெயில்கள்- 95 மற்றும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிகள்- 12 உள்ளன. இங்கெல்லாம், நான்காயிரம் தண்டனைக் கைதிகளும், ஒன்பதாயிரம் விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சிறைகளில் அடைபட்டுள்ள கைதிகளில் பலரும், தங்கள் மனைவி, தாய், தந்தை, பாட்டி, குழந்தைகள் போன்ற குடும்ப உறவினர்களைச் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் கொலை செய்தல் போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஆவர். இவர்கள், சிறைகளில் அடைக்கப்பட்டவுடன் அதனை நினைத்து மனதளவில் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். இவர்களுக்கு மனநல சிகிச்சை எதுவும் அளிக்கப்படுவதில்லை.

இங்குள்ள கைதிகள் மனதளவில் பாதிப்புக்கு ஆளானால், இவர்களுக்கு கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்கும் வசதி தற்போது உள்ளது. எனவே, திருச்சி, மதுரை போன்ற சிறைச்சாலைகளிலும் மனநல மருத்துவமனைகளை ஏற்படுத்தி, மனநல பாதிப்புக்கு ஆளான கைதிகளுக்கு சிறப்பு சிகிச்சை அளித்திட ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்கென மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள், செவிலியர்கள் போன்றவர்களை நியமித்து சிகிச்சை அளிப்பதற்கு சிறைத்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றிற்கு உத்தரவிட வேண்டும்.’என்று தெரிவிக்கப்பட்டது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வானது, இதுகுறித்து மனுதாரர், உள்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ஆகியோரிடம் மனு அளித்திடவும், இதனைப் பரிசீலித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்துவிட்டனர்.