புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக்கூட்டம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை தலைமையில் நடந்தது. மாநிலக்குழு முடிவுகளை விளக்கி மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..
தமிழகம் தொடர்ச்சியாக நீராதாரத்தை இழந்து வறட்சியை சந்தித்து வருகிறது. கடந்த ஆண்டுவரை கோடைகாலங்களில் விவசாயம் கடும் பாதிப்பை சந்திக்கும். கால்நடைகள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படும். ஆங்காங்கே குநீருக்கான தட்டுப்பாடு இருக்கும். இதற்காக அங்கொன்றும், இங்கொன்றுமாக போராட்டம் நடக்கும்.
ஆனால், தமிழகம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சியை சந்தித்து வருகிறது. மக்கள் அன்றாடம் குடிக்க, சமைக்க, குளிப்பதற்கே தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டுகின்றனர். தமிழகத்தின் அதிகமான மாவட்டங்களில் இதுதான் நிலைமை. சென்னை போன்ற பெருநகரங்களில் நிலைமை இன்னும் படு மோசமாக உள்ளது. தண்ணீர் இல்லாமல் பல்வேறு ஐடி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஓட்டல்கள் உள்ளிட்ட இன்னபிற நிறுவனங்களும் மூடப்பட்டு அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வெளியேற்றப்படுகின்றனர். மெட்ரோ ரயில் நிலையத்தின் கழிப்பறைகள்கூட மூடப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
தேர்தல் நடத்தப்படாமல் உள்ளாட்சி நிர்வாகம் முடக்கப்பட்டள்ளதால் மக்கள் யாரிடம் முறையிடுவது எனத் தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்களின் ஆட்சியின் நாட்களை எவ்வளவு தூரம் தள்ளிப்போட முடியும் என்கிற சிந்தனையிலேயே அமைச்சர் பெருமக்கள் மூழ்கிகிடக்கின்றனர். குளிப்பதற்கும், துவைப்பதற்கும் பயன்படுத்துவதாலேயே தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மாநிலத்தின் முதல்வரே அறிக்கை விடும் அவலத்தில்தான் ஆட்சி அதிகாரம் இருக்கிறது.
இந்நிலையில், பக்கத்து மாநிலமான கேரள அரசு நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில்கள் மூலமாக அனுப்பி உதவுவதாக அறிவித்தது. 20 லட்சம் லிட்டர் தண்ணீர் என்பது ஒட்டுமொத்த மாநிலத்தின் குடிநீர்த் தேவையை போக்காது என்பது உண்மை. அதே நேரத்தில் 20 லட்சம் லிட்டர் என்பது பல லட்சம் குடும்பங்களில் தாகத்தை தீர்க்க உதவும். இத்தகைய அளப்பரிய உதவியை ஏன் தமிழக அரசு மறுக்க வேண்டும்? கிடைக்கின்ற அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி மக்களின் தாகத்தைத் தீர்ப்பதே மக்கள் நல அரசின் கடமையாக இருக்க முடியும். இதில் என்ன வறட்டுக் கவுரவம் வேண்டி இருக்கிறது?
எனவே, தமிழக அரசு உடனடியாக கேளர அரசின் உதவியை ஏற்று தண்ணீரைப் பெறுவதற்கு முன்வர வேண்டும். மேலும், மத்திய அரசிடம் இருந்து தேவையான நிதியைப் பெற்று போர்க்கால அடிப்படையில் தமிழகத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அனைத்து வழிகளையும் மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மக்களின் கொந்தளிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கும். அதை இந்த அரசு எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும் என்பதை கட்சியின் மாவட்டச் செயற்குழு தெரிவித்துக்கொள்கிறது.