இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. குறிப்பாக, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்துகள், கரோனா தடுப்பூசிகள், மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஆகியவற்றின் தட்டுப்பாடு காரணமாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து வருகின்றனர். இது இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில், அமெரிக்கா, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்டவையை விமானங்கள் மூலம் இந்தியாவிற்கு அனுப்பி வருகின்றனர்.
அதேபோல், இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் மட்டும் உற்பத்தி செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்து, ஆலையைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழுவையும் அமைத்தது.
அதன் தொடர்ச்சியாக, ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியது. உற்பத்தியான ஆக்சிஜனை விநியோகிக்கும் பணியும் தொடங்கியது. இதனைக் கண்காணிப்புக் குழு தலைவரும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருமான செந்தில் ராஜ் தொடங்கிவைத்தார். அதைத் தொடர்ந்து, ஆக்சிஜன் நிரப்பிய முதல் கண்டெய்னர் லாரி காவல்துறைப் பாதுகாப்புடன் ஸ்டெர்லைட்டில் இருந்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதன் அளவு 4.82 மெட்ரிக் டன் ஆகும்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், "முதற்கட்டமாக மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு 10 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். பின்னர் 35 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது. ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்பட்ட ஆக்சிஜன் 98% தூய்மையானது. தூத்துக்குடி ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் அனைத்தும் தமிழகத்திற்கே விநியோகம் செய்யப்படும். தமிழக மருத்துவ சேவை நிறுவனத்தின் மூலம் தேவையான இடங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்படும்" என்றார்.
ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.