Skip to main content

புகார் கொடுக்க வந்த பொதுமக்கள்... அமைச்சருடன் கலெக்டர் ஆலோசனை என திருப்பி அனுப்பிய போலீசார்!!!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

 

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி தாலுகாவுக்குட்பட்ட கிராமம் சார்வான். அதே பகுதியில் வசித்து வரும் செல்வராஜ் என்பவரது மகன்களான செந்தில்குமார், ராஜ்குமார் ஆகியோர் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். அவர்களின் இந்த செயலை கண்டித்த கிராம மக்கள் மீது தாக்குதலில் ஈடுபட்டு வருவதாக கொரடாச்சேரி காவல் நிலையத்தில் பல முறை புகார் அளித்துள்ளனர்.

 

காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால், அவர்களின் அட்டூழியம் அதிகரித்தபடியே இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த சாராய வியாபாரிகள் புகார் கொடுத்த கிராம மக்கள் மீது பீர் பாட்டிலாலும் கத்தியை கொண்டும் தாக்கியுள்ளனர். இதில்  5 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

 

இந்தநிலையில் பொதுமக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவது குறித்து புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் காவல்துறையினர் எடுக்காததால், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் குழந்தைகளுடன் வாழ்ந்து வருவதாக கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க இன்று வந்தனர். 

 

அப்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உள்ளே அவர்களை அனுமதிக்காததால் பெண்கள் உட்பட அனைவரும் அங்கிருந்த காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு முற்றுகையிட முயன்றனர். 

 

அதன் பின்னர் கிராமக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினர், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன் பிறகே மக்கள் கலைந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்